இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி, 5 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.
அன்டிகுவா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, ஆரம்ப வீரர் தனுஷ்க குணதிலக்க, தினேஷ் சந்திமால் மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டங்களின் உதவியுடன் 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 273 ஓட்டங்களைக் குவித்தது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தனுஷ்க குணதிலக்க 96 ஓட்டங்களையும், சந்திமால் 71 ஓட்டங்களையும், வனிந்து ஹசரங்க 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ஜேஸன் மொஹமட் 3 விக்கெட்டுக்களையும் அல்சார்ரி ஜோசப் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 274 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 49.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அந்த அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் அதிகளவான ஓட்டங்களை துரத்தி அடித்து வெற்றி பெற்ற வரலாற்று சாதனையை மேற்கிந்திய தீவுகள் அணி படைத்தது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, எவின் லிவிஸ் 103 ஓட்டங்களையும், ஷாய் ஹோப் 84 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில், நுவன் ப்ரதீப் மற்றும் திசர பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், லக்ஷான் சந்தகென் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 121 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 8 பவுண்ரிகள் அடங்களாக 103 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட எவின் லிவிஸ் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 – 0 என்ற அடிப்படையில் மேற்கிந்தியத் தீவுகள் தனதாக்கிக்கொண்டது. அத்துடன் ஆடவர் உலகக் கிண்ண சுப்பர் லீக் தொடருக்கான 20 புள்ளிகளையும் மேற்கிந்தியத் தீவுகள் பெற்றுக்கொண்டது.
இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி, நாளை அன்டிகுவா மைதானத்தில் நடைபெறவுள்ளது.