January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொல்கத்தாவுக்கு இரண்டாவது வெற்றி – ராஜஸ்தானுக்கு முதல் தோல்வி

Photo: BCCI/IPL

ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதல் தோல்வியை சந்தித்தது.

ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 37 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

துபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான சுப்மன் கில் 47 ஓட்டங்களைப் பெற்றார். சுனில் நரைன் 15 ஓட்டங்களுடனும், நித்திஸ் ராணா 22 ஓட்டங்களுடனும், அன்ரூ ரஸல் 24 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இயன் மோர்கன் 23 பந்துகளில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 34 ஓட்டங்களைப் பெற்றார்.

ஜொப்ரா ஆச்சர் 4 ஓவர்களில் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

175 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஆரம்பம் முதலே தடுமாற்றத்துக்குள்ளானது. அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

Photo: BCCI/IPL

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன், ரொபின் உத்தப்பா ஆகியோர் சொற்ப ஓட்டங்களுடனும், ஜோஸ் பட்லர் 21 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 10.5 ஓவர்களில் 66 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடிக்குள் சிக்கியது.

பின்வரிசையில் களமிறங்கிய டொம் கரன் 36 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்களைப் பெற்று ஆறுதல் கொடுத்தார்.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ஓட்டங்களையே பெற முடிந்தது.

சிவம் மவி, நாகர்கொட்டி, வருன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இம்முறை தொடரில் பெற்ற இரண்டாவது வெற்றியாகும்.