October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜெர்மனி கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் ஜோச்சிம் லோ ஓய்வு பெறுவதாக அறிவிப்பு!

Joachim Loew facebook

ஜெர்மனி அணிக்கு உலகக் கிண்ணத்தை வென்று கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்த அந்த அணியின் பயிற்றுவிப்பாளரான ஜோச்சிம் லோ (Joachim Loew)  இந்த ஆண்டு யூரோ கிண்ண கால்பந்து தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2004 ஆம் ஆண்டு உதவிப் பயிற்றுவிப்பாளராகவும், 2006 ஆம் ஆண்டு முதல் தலைமைப் பயிற்றுவிப்பாளராகவும் ஜெர்மனி கால்பந்து அணியை வழிநடத்திய ஜோச்சிம் லோவ், 2014 ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலகக் கிண்ணத்தை ஜெர்மனிக்கு வென்று கொடுப்பதில் முன்னணி வகித்தார்.

அதுமட்டுமல்லாமல், 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற கான்ஃபெடரேஷன் சம்பியன் பட்டத்தையும் வென்றெடுப்பதிலும் உலக கால்பந்து தரவரிசையில் ஜெர்மனி அணியை நீணடகாலம் முதலிடத்தில் வைத்திருப்பதிலும் முக்கிய பங்காற்றியுள்ளார்.

எவ்வாறாயினும், 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணி லீக் சுற்றுடன் வெளியேறியமை ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.

அண்மைக் காலமாக ஜெர்மனி அணி பலமிக்க அணிகளில் ஒன்றாகப் பார்க்கப்பட்டாலும், வெற்றிக் கிண்ணங்களைக் குவிக்கும் ஒரு அணியாக பார்க்கப்படவில்லை.

இதனால், அந்த அணியின் பயிற்றுவிப்பாளராகவும் ஜோச்சிம் லோவின் எதிர்காலம் கேள்விக்குறியாக அமைந்தது.

ஆனாலும், ஜெர்மனி கால்பந்து நிர்வாகம் அவர் மீது நம்பிக்கை இழக்காமல், தொடர்ந்தும் அவருக்கு ஆதரவு வழங்கியது.

இந்நிலையில், எதிர்வரும் ஜூன் மாதம் நடக்கவிருக்கும் யூரோ கிண்ண கால்பந்து தொடர் முடிவடைந்ததும் தான் ஓய்வு பெறுவதாக ஜோச்சிம் அறிவித்துள்ளார்.

எனவே, ஜெர்மனி அணியின் அடுத்த பயிற்றுவிப்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

லிவர்பூல் அணியின் முகாமையாளரான ஜேர்கென் க்லொப், பேயர்ன் மியூனிக் அணியின் முகாமையாளரான ஹென்சி ப்லிக் மற்றும் லைப்சிக் அணியின் முன்னாள் முகாமையாளரான ரால்ப் ரேங்க்னிக் ஆகிய மூவரில் ஒருவர் ஜெர்மனியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.