July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உபுல் தரங்க அதிரடி ஆட்டம்: இலங்கை லெஜண்ட்ஸ் அணிக்கு நான்காவது வெற்றி

வீதிப் பாதுகாப்பு தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தியாவில் நடைபெற்று வரும் வீதிப் பாதுகாப்பு உலக டி-20 தொடரில், பங்களாதேஷ் லெஜண்ட்ஸ் அணியை 42 ஓட்டங்களால் வீழ்த்திய இலங்கை லெஜண்ட்ஸ் அணி தொடரில் நான்காவது வெற்றியினைப் பதிவு செய்தது.

ராய்பூர் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற இப்போட்டியில், இலங்கை லெஜண்ட்ஸ் அணியும், பங்களாதேஷ் லெஜண்ட்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை லெஜண்ட்ஸ் அணியின் தலைவர் திலகரட்ன டில்ஷான் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை லெஜண்ட்ஸ் அணி, உபுல் தரங்கவின் அதிரடி ஆட்டத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, உபுல் தரங்க ஆட்டமிழக்காது 47 பந்துகளுக்கு 5 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகள் அடங்கலாக 99 ஓட்டங்களையும், திலகரட்ன டில்ஷான் 33 ஓட்டங்களையும் எடுத்தனர்.

பங்களாதேஷ் லெஜண்ட்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் ரஜின் சாலே, மொஹமட் சரிப் மற்றும் அணித்தலைவர் மொஹமட் ரபிக் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 181 ஓட்டங்களை 20 ஓவர்களில் அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் லெஜண்ட்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 138 ஓட்டங்களை பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது.

பங்களாதேஷ் லெஜண்ட்ஸ் அணியின் சார்பில் நஸிமுடின் 41 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்களை எடுத்தார்.

இலங்கை லெஜண்ட்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில், திலகரட்ன டில்ஷான் 3 விக்கெட்டுக்களையும், தம்மிக்க பிரசாத் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகன் விருதினை இலங்கை லெஜண்ட்ஸ் அணியின் உபுல் தரங்க பெற்றுக்கொண்டார்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை லெஜண்ட்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது.

அதேநேரம், இலங்கை லெஜண்ட்ஸ் அணி, தமது கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணியை எதிர்வரும் 14ம் திகதி எதிர்கொள்ளவுள்ளது.