January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐசிசியின் பெப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரராக அஷ்வின் தெரிவாகியுள்ளார்

Photo: Facebook/ Ravichandran Ashwin

ஐசிசியின் பெப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரராக இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வினும், அதி சிறந்த வீராங்கனையாக இங்கிலாந்தின் டெமி போமன்ட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வீரர்களை மாதந்தோறும் தேர்வு செய்து ஐசிசி கௌரவித்து வருகிறது.

இதன்படி, கடந்த ஜனவரி மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் வென்றிருந்தார். இந்நிலையில் பெப்ரவரி மாதத்திற்கான விருதை பெறும் வீரரின் பெயர் நேற்று அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்த இந்திய சுழல்பந்துவீச்சாளரான அஷ்வின், ஐசிசியின் பெப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட  டெஸ்ட் தொடரில் அஷ்வின் அபாரமாக விளையாடினார்.

பெப்ரவரியில் நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டியில் 24 விக்கெட்டுக்களை வீழ்த்தியதுடன், 176 ஓட்டங்களையும் குவித்தார். அதில் சென்னையில் விளையாடிய முக்கியமான போட்டியில் சதம் விளாசினார்.  அத்துடன், இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் தனது 400 ஆவது விக்கெட்டையும் வீழ்த்தி சாதனை படைத்தார்.

இதன் அடிப்படையில் அஷ்வின் இவ் விருதுக்கு தெரிவாகியுள்ளார்.  அவருக்கு இரசிகர்கள் பெருமளவில் வாக்களித்திருந்தனர்.

இதேவேளை மகளிர் பிரிவில் இங்கிலாந்தின் டெமி போமன்ட் மாதத்தின் அதிசிறந்ந வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் நியூஸிலாந்துக்கு எதிராக பெப்ரவரி மாதம் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 3 அரைச் சதங்கள் உட்பட மொத்தமாக 231 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இந்த ஆற்றல்கள் அவருக்கு ஐசிசியின் பெப்ரவரி மாதத்துக்கான அதி சிறந்த வீராங்கனைக்கான விருதை பெற்றுக்கொடுத்துள்ளது.