July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கு பதிலடி கொடுத்து மேற்கிந்திய தீவுகள் இருபது 20 தொடரைக் கைப்பற்றியது

இலங்கை – மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான மூன்றாவதும், இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் பேபியன் எலனின் கடைசி நேர அதிரடி ஆட்டத்தால் மேற்கிந்திய தீவுகள் அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

இதன்மூலம், மூன்று போட்டிகள் கொண்ட இருபதுககு 20 தொடரை 2-1 என்ற அடிப்படையில் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, முத்தரப்புபு கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகின்றது.

இந்தத் தொடரில் முதலாவதாக கடந்த 4 ஆம் திகதி நடைபெற்ற  இருபதுக்கு 20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்டுக்களாலும், இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 43 ஓட்டங்களினாலும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், தொடர் வெற்றியைத் தீர்மானிக்கின்ற மூன்றாவது போட்டி இன்று  அன்டிகுவாவில் உள்ள கூலிஜ் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்களைக் குவித்தது.

இலங்கை அணிக்காக ஆரம்பத்தில் களமிறங்கிய துடுப்பாட்ட வீரர்கள் பெரிதளவில் சோபிக்கவில்லை.  எனினும், இளம் வீரர் அஷேன் பண்டார மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் அணியை மீட்டனர்.

அனுபவ வீரரான தினேஷ் சந்திமால் தன்னுடைய 5 ஆவது இருபதுக்கு 20 அரைச்சதத்தை பதிவுசெய்து  46 பந்துகளில் 3 பௌண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இளம் வீரர் அஷேன் பண்டார 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 35 பந்துகளில் 44 ஓட்டங்களை பெற்றார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், பேபியன் எலன் 13 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார்.

132 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சினை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய போதும், 19 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்காக லெண்டல் சிம்மன்ஸ் அதிகபட்சமாக 26 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, நிக்கோலஸ் பூரன் 23 ஓட்டங்களையும், பேபியன் எலன் 6 பந்துகளில் 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் லக்‌ஷான் சந்தகன் 3 விக்கெட்டுக்களையும், துஷ்மந்த சமீர மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகன் விருதினை பேபியன் எலன் தட்டிச் செல்ல, தொடர் நாயகன் விருதை இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க பெற்றுக்கொண்டார்.

இந்தத் தொடரில் துடுப்பாட்டத்தில் 31 ஓட்டங்களைக் குவித்த வனிந்து ஹசரங்க, 8 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். அத்துடன், மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரொன்றில் வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகபட்ச விக்கெட்டுக்களில் இரண்டாவது இடத்தையும் அவர் பெற்றுக்கொண்டார்.

ஆதிக விக்கெட்டுக்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீத் கான் 11 விக்கெட்டுக்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

இதேவேளை இலங்கை – மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.