ஹட்டன் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தீர்ப்பின் மூலம் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து “யம் மேட்ஸ்” விளையாட்டு கழக வீரர்கள் இன்று அட்டன் டன்பார் மைதானத்தில் அமைதி போராட்டம் ஈடுப்பட்டனர்.
கடந்த வருடம் நடைபெற்ற ஹட்டன் தலைவர் கால்பந்தாட்ட கிண்ணத்தின் போது விதிமுறைகளை மீறியதாக “யம் மேட்ஸ்” மற்றும் “ஸ்மோல் டிரேட்டன்” ஆகிய விளையாட்டு கழகங்களுக்கு எதிராக முறைப்பாட்டு செய்யப்பட்டது.
இதனை விசாரணை செய்த ஹட்டன் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஒழுக்காற்று குழு போட்டியில் பங்குபற்றிய விளையாட்டு வீரர் ஒருவர் பதிவு செய்யப்பட்ட ஒரு கழத்திற்கு மாத்திரம் விளையாடாமல் குறித்த இரண்டு கழங்களிலும் விளையாடி விதிமுறைகளை மீறியுள்ளதை உறுதி செய்தது.
இதையடுத்து இரண்டு கழகங்களுக்கும் 2020.01.31. இருந்து 2021.01.31 வரை போட்டிகளில் விளையாட தடை விதித்து எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
இவ்வாறான ஒரு சூழ் நிலையில் குறித்த ஹட்டன் தலைவர் கிண்ண இறுதி போட்டிக்கு ஒரு விளையாட்டு கழகத்தை மட்டும் மீண்டும் இணைத்துக்கொண்டு “யம் மேட்ஸ்” கழகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அதன் வீரர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இது குறித்து தாங்கள் நீதி மன்றத்தினை நாடி தடை உத்தரவு ஒன்றினை பெறவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் போது “ஹட்டனில் கால்பந்தாட்டத்தை பாதுகாப்போம்”, “குற்றத்தை வளர்ப்பவர்களை வெறுக்கிறோம்”, “ஒரே கிண்ணத்திற்கு இரண்டு சட்டங்களா?”, “தலைவரின் இறுதி முடிவு செல்லுபடியற்றதா?“ போன்ற வாசகம் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு சுகாதார விதிமுறைக்கமைய அமைதியான முறையில் வீரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.