ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் தொடரில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இன்று தினேஸ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கின்றது.
ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை துடுப்பாட்டத்தில் பலம் பொருந்திக் காணப்படுகின்றது.
சென்னை, பஞ்சாப் ஆகிய அணிகளை வீழ்த்திய சிறப்புடன் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி களமிறங்குகின்றது.
அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித், சஞ்சு சாம்ஸன் ஆகியோர் முதலிரண்டு ஆட்டங்களிலும் அரைச் சதமடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 31 பந்துகளில் அரைச் சதமடித்த சகலதுறை வீரர் ராகுல் டிவாட்டியா, ஜோஸ் பட்லர் ஆகியோருடன் ரொபின் உத்தப்பாவும் பிரகாசித்தால் ராஜஸ்தான் அணிக்கு 200 ஓட்டங்கள் கூட மிக இலகுவாகவே இருக்கும்.
ஜொப்ரா ஆச்சர், டொம் கரன், ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோர் கடந்த போட்டிகளை விட சிறப்பாக பந்து வீச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் தத்தமது பொறுப்பை சரிவர நிறைவேற்றினால் ராஜஸ்தான் அணி ஹேட்ரிக்வெற்றியை எட்டுவது அவ்வளவு கடினமாக இருக்காது.
எதிர்ப்பார்த்த இலக்கை அடையுமா கொல்கத்தா?
முதல் ஆட்டத்தில் மும்பையிடம் தோல்வியடைந்த கொல்கத்தா அணி இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸை வெற்றி கொண்டது.
அந்த நிலையை தக்கவைக்க இன்றையப் போட்டியில் கொல்கத்தா வெற்றிபெற வேண்டியது அவசியமாகும்.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான சுப்மன் கில் கடந்த ஆட்டத்தில் பிரகாசித்த போதிலும் எவரும் அவருக்கு சிறந்த ஒத்தழைப்பு கொடுத்து துடுப்பெடுத்தாடவில்லை.
எனவே, அந்தக் குறையை நிவர்த்தி செய்தால் கொல்கத்தா அணியாலும் ஓட்டங்களைக் குவிக்க முடியும்.
துடுப்பாட்டத்தில் பெயர் பெற்ற அணித்தலைவர் தினேஸ் கார்த்திக், ஒன்ரே ரஸல், இயன் மோர்கன் ஆகியோர் இதுவரை பெரிதாக எதனையும் சாதிக்கவில்லை.
அவர்கள் நின்று நிலைத்து ஆடினால் மாத்திரமே கொல்கத்தா அணியால் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியும்.
அதிரடி துடுப்பாட்ட வீரராக அவ்வப்போது மிரட்டக்கூடிய சுனில் நரைனும் கடந்த இரண்டு ஆட்டங்களிலும் பெரிதாகப் பிரகாசிக்கவில்லை.
இது கொல்கத்தா அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. பந்துவீச்சில் சுனில் நரைன், குல்தீப் யாதவ் ஆகியோர் நம்பிக்கையளிக்கின்றனர்.
ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தானும், கொல்கத்தாவும் 20 தடவைகள் மோதி அவற்றில் கொல்கத்தா 10 வெற்றிகளையும், ராஜஸ்தான் 8 வெற்றிகளையும் பெற்றுள்ளன.
சமநிலையில் முடிந்த 2 ஆட்டங்களிலும் சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் வெற்றிபெற்றுள்ளது.