January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சன்ரைசர்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லிக்கு முதல் தோல்வி!

Photo: BCCI/ Sunrisers Hyderabad

ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் தொடரில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் வெற்றியைப் பெற்றது.

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 15 ஓட்டங்களால் வெற்றி வாகைசூடியது. இது டெல்லி அணி இத்தொடரில் அடைந்த முதல் தோல்வியாகும்.

அபுதாபியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கெபிடெல்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தலைவர் டேவிட் வார்னர் மற்றும் ஜொனி பெயார்ஸ்டோவ் ஜோடி சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தது.

முதல் விக்கெட்டுக்காக 9.3 ஓவர்களில் 77 ஓட்டங்கள் பகிரப்பட்டபோது டேவிட் வார்னர் 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 33 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளை விளாசினார்.

Photo:BCCI/Delhi Capitals

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் அதிரடி வீரரான மனிஸ் பாண்டேவினால் 5 பந்துகளில் 3 ஓட்டங்களையே பெறமுடிந்தது. என்றாலும், ஜொனி பெயார்ஸ்டோவ் அரைச் சதமடித்து அணியை வலுவான நிலைக்கு கொண்டுவந்தார்.

48 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்களைப் பெற்றார். கேன் வில்லியம்ஸன் 26 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 41 ஓட்டங்களையும், அப்துல் சமாட் 7 பந்துகளில் ஒரு சிக்ஸர், ஒரு பௌண்டரியுடன் ஆட்டமிழக்காமல் 12 ஓட்டங்களையும் பெற்றனர்.

சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்களைப் பெற்றது. கெகிஸோ ரபாடா 4 ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், அமித் மிஸ்ரா 4 ஓவர்களில் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

163 ஓட்டங்களை நோக்கி களமிறங்கிய டெல்லி கெபிடெல்ஸ் அணி வழமைக்கு மாறாக துடுப்பாட்டத்தில் தடுமாறியது. முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் டெல்லி அணியின் முதல் விக்கெட் 2 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது. பிரித்திவ் ஷா 2 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

சிறப்பாக பந்து வீசிய ரஷித் கான்


அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் 21 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 17 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். அதிரடி துடுப்பாட்ட வீரரான ஷிகர் தவானும் மந்தகதியிலேயே ஓட்டங்களைப் பெற்றார்.

ஷிகர் தவான் 31 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 34 ஓட்டங்களையும், ஸிம்ரோன் எட்மயர் 12 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

மார்கஸ் ஸ்டொய்னிஸ் 11 ஓட்டங்களுடனும், ரிஷப் பாண்ட் 28 ஓட்டங்களுடனும் நடையைக் கட்டினர்.

அக்ஸார் பட்டேல் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க கெகிஷோ ரபாடா 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

டெல்லி கெபிடெல்ஸ் அணி 20 ஓவர்களில் 147 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வியடைந்தது.

அபாரமாகப் பந்து வீசிய ரஸிட் கான் 4 ஓவர்களில் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் 4 ஓவர்களில் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், கே.கேஅஹமட் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்த ஆட்டம் இவ்விரண்டு அணிகளும் இத்தொடரில் விளையாடிய மூன்றாவது ஆட்டம். இதில் சன்ரைசர்ஸ் அணி முதல் வெற்றியையும், டெல்லி அணி முதல் தோல்வியையும் சந்தித்துள்ளன.