January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரெஞ்ச் ஓபன்: 2ஆம் சுற்றைத் தாண்ட முடியாமல் திணறிய பிரிட்டிஷ் நட்சத்திரங்கள்

டென்னிஸ் உலகின் நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் 4 மாதங்கள் தாமதமாக ஆரம்பமாகியுள்ளது.

வழமையாக ஏப்ரல்-மே மாதங்களில் வசந்த காலத்தில் களிமண் தரையில் நடத்தப்படும் இந்தத் தொடர் இந்த வருடம் கொரோனா அச்சத்தால் இத்தனை மாதங்கள் தாமதாகியுள்ளது.

எவ்வாறாயினும், போட்டித் தொடர் நடைபெறும் பிரான்ஸின் பாரிஸ் நகரில் 10 செல்சியஸ்க்கு குறைவான வெப்பநிலை நிலவுவதால் வீர, வீராங்கனைகள் சிலர் குளிரில் தம்மால் விளையாட முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

இரண்டாம் நாளான இன்று ஆடவருக்கான முதல் சுற்றுப் போட்டி ஒன்றில் நட்சத்திர வீரரான சேர்பியாவின் நொவெக் ஜோகோவிச் சுவீடனின் மிக்கெல் யேமரை எதிர்கொண்டார்.

ஜோகோவிச் உலகத் தரவரிசையில் முதலிடம் வகிப்பதுடன் யேமர் 80 ஆவது இடத்தில் இருக்கிறார். போட்டியில் முதல் செட் ஆட்டம் 20 நிமிடங்கள் நீடித்ததுடன் அதன் பிறகு ஜோகோவிச் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார்.

ஒரு மணித்தியாலமும் 38 நிமிடங்களும் நீடித்த இந்தப் போட்டியில் 6-0, 6-2, 6-3 எனும் நேர் செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றியீட்டினார்.

பிரெஞ்ச் ஓபனில் ஒரு தடவை சாம்பியனாகியுள்ள ஜோகோவிச் தனது 18 ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை குறிவைத்துக் களமிறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முன்னதாக நடைபெற்ற போட்டிகளில் ஸ்பெய்னின் ரபேல் நடால், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் போன்றோர் முதல் சுற்றில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்தனர்.

என்றாலும், பிரித்தானிய வீர- வீராங்கனைகள் எவரும் இந்தமுறை பிரெஞ்ச் ஓபனில் இரண்டாம் சுற்றுக்கு அப்பால் முன்னேற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இரண்டாம் சுற்றில் விளையாடிய கெம்ரோன் நொரி, லியாம் பிரொடி ஆகியோர் தோல்வியடைந்தனர்.

நட்சத்திர வீரரான அன்டி மரி மற்றும் டான் எவன்ஸ் ஆகியோர் தொடர் ஆரம்பமான ஞாயிற்றுக்கிழமையே முதல் சுற்றுடன் தோல்வியடைந்து வெளியேறினர்.

பிரித்தானிய வீராங்கனை ஹெதர் வாட்சனும் மகளிர் ஒற்றையர் இரண்டாம் சுற்றில் பிரான்ஸின் பியோனா பெர்ரோவிடம் தோல்வியடைந்தார்.

இதனால் பிரித்தானிய வீரர்கள்-வீராங்கனைகள் எவரும் இன்றியே பிரெஞ்ச் ஓபன் தொடர உள்ளது.