Photo: BCCI/Royal challengers bangalore
பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான இன்றைய ஐபிஎல் இருபது 20 ஆட்டம் ரசிகர்களுக்கு பெரு விருந்து படைக்கும் விதமாக நடந்து முடிந்தது.
குறிப்பாக ஆட்டத்தின் கடைசி 5 ஓவர்களும் ஆச்சரியத்தை அள்ளிக்கொடுத்தன. மும்பை அணியில் இந்தியாவின் சௌரவ் திவாரிக்கு பதிலாக இஷான் கிஷானுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
பெங்களூர் அணியில் அவுஸ்திரேலியாவின் ஜோஷ் பிலிப், தென் ஆபிரிக்காவின் டேல் ஸ்டேன், இந்தியாவின் உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு இலங்கையின் இசுரு உதான, அவுஸ்திரேலியாவின் அடம் ஷம்பா, இந்தியாவின் குர்கீத் சிங் ஆகியோர் இடம்பெற்றனர்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோஹித் சர்மா களத்தடுப்பை தெரிவுசெய்ய, முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பு பெங்களுர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு கிட்டியது.
வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட இந்தியாவின் டெவ்டட் படிக்கால் மற்றும் அவுஸ்திரேலியாவின் ஏரோன் பிஞ்ச் ஜோடி 9 ஓவர்களில் 81 ஓட்டங்களை அதிரடியாகப் பகிர்ந்தது. ஏரோன் பிஞ்ச் 40 பந்துகளில் ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்களைப் பெற்றார்.
விராத் கோலி தடுமாற்றம்
அடுத்துவந்த அணித்தலைவர் விராத் கோலியால் இன்றும் பிரகாசிக்க முடியவில்லை. 11 பந்துகளை எதிர்கொண்ட அவர் தட்டுத்தடுமாறி 3 ஓட்டங்களைப் பெற்றார்.
பெங்களுர் அணி 12.2 ஓவர்களில் 92 ஓட்டங்களுக்கு இரண்டாவது விக்கெட்டை இழந்தது. தென்ஆபிரிக்காவின் ஏபி டிவிலியர்ஸும், சிவம் டப்பும் அதிரடியாகவும், அபாரமாகவும் ஓட்டங்களைக் குவித்தனர்.
பந்துகளை நாலாபுறமும் தெறிக்கவிட்ட இவர்கள் வீழ்த்தப்படாத நான்காம் விக்கெட்டுக்காக 17 பந்துகளில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஏபி டிவிலியர்ஸ் 24 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 55 ஓட்டங்களையும், சிவம் டப் 10 பந்துகளில் மூன்று சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 27 ஓட்டங்களையும் பகிர பெங்களுர் அணியின் ஓட்ட எண்ணிக்கை 201 ஆகப் பதிவானது.
நியூஸிலாந்தின் ட்ரென்ட் பௌல்ட் 4 ஓவர்களில் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், தீபக் சார் 4 ஓவர்களில் 31 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
சமநிலையில் முடிந்த ஆட்டம்
வெற்றி இலக்கான 202 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆரம்பமே அச்சுறுத்தலாக இருந்தது.
அணித்தலைவர் ரோஹித் சர்மா 8 ஓட்டங்களுடனும், சூரியகுமார் யாதவ் ஓட்டமின்றியும் ஆட்டமிழந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி 2.2 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
தென் ஆபிரிக்காவின் குவின்டன் டி கொக் 14 ஓட்டங்களுடனும், ஹர்திக் பாண்ட்யா 15 ஓட்டங்களுடனும் நடையைக் கட்டினர். மும்பை அணி 11.2 ஓவர்களில் 78 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து கடும் இக்கட்டுக்கு உள்ளாகியிருந்தது.
மும்பை அணி வெற்றிபெற 52 பந்துகளில் 128 ஓட்டங்கள் தேவையாக இருந்த போது இஷான் கிஷானுடன் மேற்கிந்தியத் தீவுகளின் கிரான் பொலார்ட் இணைந்தார்.
அதுவரை ஆட்டம் பெங்களுர் அணிக்கு சார்பாக இருந்த போதிலும் அதன் பின்னர் அதிரடி வாணவேடிக்கை காட்டிய பொலார்ட் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். பெங்களுர் அணி வீரர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்த பொலார்ட் 21 பந்துகளில் அரைச்சதம் கடந்தார்.
ஏற்கனவே அரைச்சதத்தைக் கடந்திருந்த இஷான் கிஷானும் வெளுத்துவாங்க பெங்களுர் அணியின் பந்து வீச்சாளர்கள் திக்குமுக்காடிப் போனார்கள். வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்களில் 12 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டை கைப்பற்றினார்.
எவ்வாறாயினும் அவரது 4 ஓவர்களும் முதல் 12 ஓவர்களுக்கு முன்னதாகவே முடிந்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது. மும்பை அணி வெற்றிபெற கடைசி ஓவரில் 19 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை இலங்கையின் இசுரு உதான வீசினார்.
முதலிரண்டு பந்துகளில் தலா ஒரு ஓட்டம் பெறப்பட்ட போதிலும் அடுத்த 2 பந்துகளிலும் இஷான் கிஷான் சிக்ஸரடிக்க ஆட்டத்தின் விறுவிறுப்பு அதிகமானது. ஐந்தாவது பந்துவீச்சில் ரசிகர்களை ஆசனத்தின் நுனிக்கே அழைத்துச் சென்ற வண்ணம் இஷான் கிஷான் ஆட்டமிழந்தார். 58 பந்துகளை எதிர்கொண்ட அவர் 9 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 99 ஓட்டங்களைப் பெற்றார்.
கடைசிப் பந்தில் மும்பையின் வெற்றிக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன் அந்தப் பந்தை எதிர்கொண்ட கிரான் பொலார்ட் அதனை பவுண்டரிக்கு விரட்ட மும்பை இந்தியன்ஸ் அணியும் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ஓட்டங்களைப் பெற்று சமநிலையடைந்தது.
கிரான் பொலார்ட் 24 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்களை விளாசினார்.இசுரு உதான 4 ஓவர்களில் 45 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.
கிரான் பொலார்டும் இஷான் கிஷானும் 16வது ஓவரில் 10 ஓட்டங்கள், 17வது ஓவரில் 27 ஓட்டங்கள், 18வது ஓவரில் 22 ஓட்டங்கள், 19வது ஓவரில் 12 ஓட்டங்கள், 20வது ஓவரில் 18 ஓட்டங்கள் என சகலரின் பந்துவீச்சுக்களுக்கும் வஞ்சகமின்றி விளாசித்தள்ளினர்.
ஆனாலும், சூப்பர் ஓவரில் பெங்களுர் அணி வெற்றியை தன்வசப்படுத்தியது.