Photo: BCCI/ Rajasthan Royals
ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் தொடரில் கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி அபார வெற்றியீட்டியது.
பஞ்சாப் அணி நிர்ணயித்த 224 ஓட்டங்கள் இலக்கை 19.3 ஓவர்களில் ராஜஸ்தான் 6 விக்கெட் இழப்புக்கு கடந்தது. சார்ஜாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 223 ஓட்டங்களைக் குவித்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான அணித்தலைவர் லோகேஷ் ராகுல் 54 பந்துகளில் ஒரு சிக்ஸர் 7 பவுண்டரிகளுடன் 69 ஓட்டங்களைப் பெற்றார்.
அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய மயன்க் அகர்வால் 50 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 10 பவுண்டரிகளுடன் 106 ஓட்டங்களைக் குவித்தார். கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 223 ஓட்டங்களைக் குவித்தது.
வெற்றி இலக்கான 224 ஓட்டங்களை நோக்கி பதிலெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 2.2 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.
இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். முன்வரிசை வீரர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க தவறிய போதிலும் மத்திய வரிசை வீரர்கள் சிறப்பாகத் துடுப்பாடி ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
சஞ்சு சாம்ஸன் அதிரடி
சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 27 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 7 பௌண்டரிகளுடன் 50 ஓட்டங்களையும் சஞ்சு சாம்ஸன் 42 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகளுடன் 85 ஓட்டங்களையும் பெற்று ராஜஸ்தான் அணியின் வெற்றியை இலகுவாக்கினர்.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ஓட்டங்கள் பெற்று வெற்றியை அடைந்தது. இது இத்தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி அடைந்த இரண்டாவது வெற்றியாகும்.