Photo: BCCI/ IPL
ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இன்று விராத் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணியை துபாயில் எதிர்த்தாடத் தயாராகியுள்ளது.
நடப்பு சம்பியனான மும்பை அணியில் தலைவர் ரோஹித் சர்மா, தென் ஆபிரிக்காவின் குயின்டன் டி கொக், கிரான் பொலார்ட், இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா ஆகிய நட்சத்திர துடுப்பாட்ட வீரர்கள் இருக்கின்றனர்.
ரோஹித் சர்மாவும், சூர்யகுமார் யாதவ்வும் சிறப்பாக செயற்பட்டு மும்பை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். அந்த வகையில் அணியின் துடுப்பாட்டத் திறன் உயர்ந்துள்ளது.
ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, கிரான் பொலார்ட் ஆகியோர் இன்றைய போட்டியிலும் பிரகாசிக்கும் பட்சத்தில் மும்பை அணியால் அதிரடியாக ஓட்டங்களைக் குவிக்க முடியும் வாய்ப்புள்ளது.
இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா, அவுஸ்திரேலியாவின் ஜேம்ஸ், பெட்டின்சன், நியூஸிலாந்தின் ட்ரென்ட் பௌல்ட் என வேகப்பந்துவீச்சுப் படையே மும்பையிடம் உள்ளது.
zராகுல் சகார், குர்னல் பாண்ட்யா ஆகியோர் சுழல்பந்துவீச்சில் ஆற்றலை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர்.
கோலியின் எழுச்சி
கோஹ்லியின் முதல் போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணி இரண்டாவது போட்டியில் பஞ்சாப் அணியிடம் 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து துடுப்பாட்டத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது.
அணித்தலைவர் விராத் கோஹ்லியால் முதலிரண்டு போட்டிகளிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க முடியாமல் போனது. இதனால் அந்தக் குறையை நிவர்த்தி செய்து ஓட்டங்களைக் குவிக்கும் தரத்துக்கு உயர வேண்டிய கட்டாயத்தில் கோஹ்லி இருக்கிறார்.
நம்பிக்கைக்குரிய துடுப்பாட்ட வீரராகத் திகழும் தென் ஆபிரிக்காவின் ஏபி டிவிலியர்ஸ் கடந்த இரண்டு போட்டிகளிலும் பெங்களூர் அணிக்காக துடுப்பாட்டத்தில் தனி ஒருவராகப் போராடியிருந்தார்.
கோஹ்லியும், டிவிலியர்ஸும் பிரகாசித்தால் சிறந்த ஓட்ட எண்ணிக்கையை குவிக்க முடியும். பந்துவீச்சைப் பொறுத்தவரை பெங்களூர் அணி சொதப்பலாகவே செயற்படுகின்றது.
தென் ஆபிரிக்காவின் டேல் ஸ்டேன், இந்தியாவின் உமேஸ் யாதவ் ஆகியோர் ஓட்டங்களை வாரி வழங்கியதுடன் விக்கெட்டுகளையும் வீழ்த்தவில்லை.
இதனால் புதிய பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க வேண்டிய இக்கட்டை பெங்களூர் அணி எதிர்நோக்கியுள்ளது.
ஐ.பி.எல் இருபது 20 கிரிக்கெட் வரலாற்றில் பெங்களூர் மற்றும் மும்பை அணிகள் இதுவரை 25 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் அவற்றில் மும்பை 16 வெற்றிகளையும், பெங்களூர் 9 வெற்றிகளையும் பெற்றுள்ளன.