Photo:BCCI/ IPL
நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் துடுப்பாட்டத்தில் மந்தமாக விளையாட, வெற்றியை மிக லாவகமாக அடைந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
அபுதாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் டேவிட் வோனர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
எனினும், அந்த முடிவை கேள்விக்குட்படுத்தும் விதமாக கொல்கத்தா வீரர்கள் அபாரமாக பந்து வீசி சன்ரைசர்ஸ் அணியின் துடுப்பாட்டத்தைக் கட்டுப்படுத்தினர்.
டெஸ்ட் போல் ஆடிய ஹைதராபாத்!
சன்ரைசர்ஸ் அணி வீரர்களின் துடுப்பாட்டம் இது இருபது20 ஆட்டமா அல்லது டெஸ்ட் ஆட்டமா என சந்தேகிக்கும் அளவுக்கு மந்தமாக அமைந்திருந்தது.
வழமையாக அதிரடி காட்டும் டேவிட் வோனர் 30 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 36 ஓட்டங்களைப் பெற்றார். மணிஸ் பாண்ட்டே 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 3 பௌண்டரிகளுடன் 51 ஓட்டங்களைப் பெற்று ஆறுதல் கொடுத்தார்.
விருத்மன் ஷா 31 பந்துகளில் 30 ஓட்டங்களைப் பெற்று ரன்அவுட் ஆனார். விக்கெட்டுகள் பெரிதாக வீழ்த்தப்படாவிட்டாலும் கொல்கத்தா அணி வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசி சன்ரைசர்ஸ் வீரர்கள் ஓட்டங்கள் பெறாமல் தடுத்தனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 142 ஓட்டங்களையே பெற்றது.பெட் கமின்ஸ் 4 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும், சிவி வருண் 4 ஓவர்களில் 25 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும், ஒன்ரே ரஸல் 2 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இலகுவான இலக்கான 143 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 1.2 ஓவர்களில் 6 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.
சோபிக்கத் தவறிய சுனில் நரேன்
ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக சுனில் நரைன் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார்.நித்திஷ் ராணா 26 ஓட்டங்களுடன் வெளியேற, அணித்தலைவர் திணேஷ் கார்த்திக் ஓட்டமின்றி ஆட்டமிழந்து பெரும் ஏமாற்றமளித்தார். கொல்கத்தா அணி 6.2 ஓவர்களில் 53 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து சற்று பின்தங்கியிருந்தது.
எனினும், சுப்மன் கில் மற்றும் இயன் மோர்கன் ஜோடி சிறப்பாகத் ஆடி வீழ்த்தப்படாத நான்காவது விக்கெட்டுக்காக 70 பந்துகளில் 92 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
சுப்மன் கில் 62 பந்துகளை சந்தித்து 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 70 ஓட்டங்களையும், இங்கிலாந்தின் இயன் மோர்கன் 29 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 42 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று கொல்கத்தா அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
அஹமட், நடராஜன், ரஸிட் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் வெற்றியைப் பதிவுசெய்ய சன்ரைசர்ஸ் அணி இரண்டாவது தோல்வியைத் தழுவியது.