July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன உறுப்பினர்களை ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தல்!

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால, உள்ளிட்ட நிறைவேற்றுக் குழுவை எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

புதிய கிரிக்கெட் யாப்பொன்றை உருவாக்க உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரர்களான முத்தையா முரளிதரன், சித்தத் வெட்டிமுனி, மைக்கேல் திஸ்ஸெர மற்றும் முன்னாள் எஸ்.எல்.சி தலைவர்கள் அனா புஞ்சிஹேவ, விஜய மலலசேகர மற்றும் ரியென்சி விஜெடிலேக் மற்றும் சிவில் ஆர்வலர்கள் அடங்கலாக 12 பேர் கொண்ட குழு இவ் ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளது.

தற்போதுள்ள கிரிக்கெட் யாப்பிற்கு அமைய கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்பாடுகளில் அரசியல் மற்றும் பிற காரணிகள் தாக்கம் செலுத்துவதாக குறித்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலுக்கு முன்பதாக யாப்பில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் அர்ஜுன ஒபேசேகர மற்றும் மாயாதுன்ன கொறய் ஆகிய நீதிபதிகள் குழாமினால் இம்மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.