October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சனிக்கிழமை ஆரம்பமாகின்றது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றால் மாத்திரமே டெஸ்ட் உலக சாம்பியன்ஸிப் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறலாம்.

தொடரை 2-0 அல்லது அதற்கு மேற்பட்ட வெற்றிகளுடன் கைப்பற்றினால் இங்கிலாந்து அணியால் டெஸ்ட் உலக சாம்பியன்ஸிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும்.

ஒருவேளை, இந்தத் தொடர் சமநிலையில் முடிந்தால் டெஸ்ட் உலக சாம்பியன்ஸிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு அவுஸ்திரேலியாவுக்கு கிட்டும்.

டெஸ்ட் உலக சாம்பியன்ஸிப் இறுதிப் போட்டி எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ளதுடன், இதற்கு முதல் அணியாக நியூஸிலாந்து தகுதிபெற்றுள்ளது. இதனால் பதிலடி கொடுத்து டெஸ்ட் உலக சாம்பியன்ஸிப் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற வேண்டும் என்ற சவாலான நிலையில் இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்குகின்றது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்திலேயே இங்கிலாந்து – இந்திய அணிகளுக்கிடையிலான முதல் போட்டி நடைபெற்றது. குறுகிய இடைவெளியில் இரண்டாவது போட்டிக்காக தயாராகும் இந்த மைதானத்தின் ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு ஏற்றால் போல் மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிக்கான இங்கிலாந்து அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜொப்ரா ஆச்சர் காயம் காரணமாக விலகியுள்ளார். விக்கெட் காப்பாளரான ஜோஸ் பட்லருக்கு பதிலாக பென் போக்ஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் ஈட்டிய வெற்றியுடன் பலமாக காட்சியளிக்கிறது. அணித்தலைவர் ஜோ ரூட் அணியின் முதுகெலும்பாக திகழ்கிறார். அவர் கடந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் இரண்டு இரட்டை சதங்களுடன் மூன்று சதங்களை விளாசியுள்ளார்.
பந்துவீச்சு, களத்தடுப்பு, துடுப்பாட்டம் என சகலதுறைகளிலும் இங்கிலாந்து அணி வலுவாக உள்ளது. அணியின் புதுமுக வீரர்களும் சிறப்பாக ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.

மறுபக்கம் இந்திய அணியோ நட்சத்திர வீரர்கள் பிரகாசிக்கிறார்கள் இல்லை எனும் சோகத்தில் மூழ்கியுள்ளது. அஜின்கியா ரகானே அவுஸ்ரேலிய விஜயத்தின் போது மெல்போர்ன் டெஸ்டில் மாத்திரமே சதமடித்தார். அதன் பிறகு அவர் குறிப்பிடும் படியாகப் பிரகாசிக்கவில்லை.

அணித்தலைவர் விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா,செட்டிஸ்வர் புஜாரா, ரிஷப் பாண்ட், சுப்மன் கில் என அத்தனை வீரர்களும் பிரகாசிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக பந்துவீசுதுடன் அவருக்கு சிறந்த ஒத்துழைப்பு வழங்கக்கூடிய ஒருவர் இந்திய அணிக்கு தேவைப்படுகிறார். வேகப்பந்துவீச்சில் மாற்றம் இருக்காது என இந்திய அணி அறிவித்துள்ளது.

சொந்த மண்ணில் 4 ஆண்டுகளுக்கு பின்னரும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 21 வருடங்களுக்குப் பின்னரும் தோல்வியடைந்த சோகத்தில் இந்தியா உள்ளது. எனவே, இந்தப் போட்டியில் வெற்றிபெற்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுப்பதுடன் டெஸ்ட் உலக சாம்பியன்ஸிப் இறுதிப் போட்டி வாய்ப்பையும் பெறும் எதிர்பார்ப்பில் இந்தியா காத்திருக்கின்றது.

இந்தியாவும் இங்கிலாந்தும் இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளதுடன், அவற்றில் இங்கிலாந்து 48 போட்டிகளிலும், இந்தியா 26 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. இந்தியா 26 போட்டிகளை வென்றுள்ளது. 49 டெஸ்ட் போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிந்துள்ளன.