மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் பங்களாதேஷ் அணி தடுமாற்றமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றியை நெருங்கியிருந்த போது யாரும் எதிர்பாராத வண்ணம் அறிமுக வீரரான கைல் மேயர்ஸ் இரட்டை சதமடிக்க வெற்றியை தாரைவார்க்க வேண்டிய நிலை பங்களாதேஷுக்கு ஏற்பட்டது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அவ்வாறே பின்வரிசை வீரர்களின் அபார துடுப்பாட்டத்தால் மேற்கிந்திய தீவுகள் அணி சவால் விடுத்துள்ளது. டாக்காவில் நடைபெறும் இந்தப் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 223 ஓட்டங்களுடன் மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது.
ருக்மா பொனர் 74 ஓட்டங்களுடனும், ஜொஸுவா டா சில்வா 22 ஓட்டங்களுடனும் ஆட்டத்தை ஆரம்பித்தனர். மேலும் 43 ஓட்டங்கள் பகிரப்பட்ட நிலையில் ருக்மா பொனர் 90 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
ஜோஸுவா டா சில்வா 92 ஓட்டங்களையும், அல்சாரி ஜோஸப் 82 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க மேற்கிந்திய தீவுகள் அணி 409 ஓட்டங்களைக் குவித்தது. இரண்டாம் நிலை வீரர்களுடன் மேற்கிந்திய தீவுகள் அணி இந்தளவுக்கு ஆற்றலை வெளிப்படுத்தியிருப்பதும் சிறப்பம்சமாகும்.
அபு ஜாயெட், தைஜுல் இஸ்லாம் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இரண்டாம் நாள் பிற்பகலில் முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி முதல் ஓவரில் ஒரு ஓட்டத்துக்கு முதல் விக்கெட்டை இழந்தது. சௌம்யா சர்கார் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து நஜுமுல் ஹுஸெய்ன் 4 ஓட்டங்களோடும், அணித்தலைவர் மொமினுல் ஹக் 21 ஓட்டங்களுடனும் வெளியேறினர். தமிம் இக்பால் 44 ஓட்டங்களைப் பெற்றார். பங்களாதேஷ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 105 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்குவந்தது.
பந்துவீச்சில் ஸெனன் கெப்ரியல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முஷ்பிகுர் ரஹீம் 27 ஓட்டங்களுடனும், மொஹமட் மிதுன் 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.