
இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கான 2 கிலோ மீற்றர் தூரம் பயிற்சியில் முக்கிய வீரர்கள் நால்வர் தோல்வியடைந்துள்ளனர். குசல் ஜனித் பெரேரா, டில்ருவன் பெரேரா, பானுக ராஜபக்ஸ மற்றும் தனுஷ்க குணதிலக ஆகியோரே அந்த நால்வராவர்.
இலங்கை கிரிக்கெட் அணி சமீபகாலமாக படுதோல்விகளை சந்தித்துவருகின்றது. இதனால் அணியில் சில மாற்றங்களை ஏற்படுத்தவும், பயிற்சிகளின் தரத்தை உயர்த்தவும் அண்மையில் தீர்மானிக்கப்பட்டது. இதனால் ஒரு வீரர் கட்டாயம் 2 கிலோ மீற்றர் தூரம் ஓடி தனது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என சமீபத்தில் கட்டாயமாக்கப்பட்டது.
இந்த பரிசோதனை நடத்தப்பட்டதுடன், இதில் மேற்படி நால்வரும் தோல்வியடைந்துள்ளனர். இதனால் அடுத்துவரும் பயிற்சி தேர்வில் மிகுந்த கவனத்துடன் பங்கேற்க வேண்டிய நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இலங்கை வீரர்களுக்கு போதிய உடற்தகுதியின்மையின் காரணமாகவே அவர்களால் சிறப்பாக விளையாட முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து 2 கிலோ மீற்றர் பயிற்சி ஓட்ட திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தப் பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மாத்திரமே இலங்கை கிரிக்கெட் அணிக்காக விளையாட சந்தர்ப்பம் அளிக்கப்படும். இந்நாட்களில் இலங்கை வீரர்கள் கடும் பயிற்சிகளில் ஈடுபட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.