January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நுவரெலியாவில் பிரீமியர் லீக் கிரிக்கெட்

நுவரெலியா மாவட்டத்திலுள்ள இளம் கிரிக்கெட் வீரர்களை கண்டறிவதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 14 ஆம் திகதி நுவரெலியாவில் ஆரம்பமாகவுள்ளது.

இலைமறைகாயாக இருக்கும் திறமை வாய்ந்த வீரர்களை வெளிக்கொணர்வதற்காக இந்தக் கிரிக்கெட் தொடரை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அனுசரணையுடன் நுவரெலியா மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்துகின்றது.

தொடருக்காக நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த 90 வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் 5 அணிகள் சார்பாக விளையாடவுள்ளனர். ஹங்குராக்கெத்த டஸ்கர்ஸ், வலப்பனை நைட்ரைடர்ஸ், கொத்மலை கிங்ஸ், மஸ்கெலியா சன்ரைசஸ், நுவரெலியா கிளடியேடர்ஸ் ஆகிய 5 அணிகளே அவை.

தொடரில் விளையாடும் வீரர்கள் இந்நாட்களில் கடும் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள். போட்டித் தொடர் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

19 வயதுக்குட்பட்ட, 21 வயதுக்குட்பட்ட மற்றும் 23 வயதுக்குட்பட்ட அணிகளின் வீரர்களை உள்ளடக்கி இந்தத் தொடர் நடத்தப்படுகின்றது. இதில் பிரகாசிக்கும் வீரர்களை தேசிய மட்டத்துக்கும் சர்வதேச தரத்துக்கும் உயர்த்துவதே எதிர்பார்ப்பு என ஏற்பாட்டுக் குழு கூறுகின்றது.