November 26, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முதல் புள்ளியைப் பெறப்போவது யார்? கொல்கத்தா- ஹைதராபாத் மோதல்!

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் தலா ஒரு ஆட்டத்தில் விளையாடியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் புள்ளிகள் எதுவுமின்றி உள்ளன. இந்நிலையில் இவ்விரண்டு அணிகளும் நேருக்கு நேர் தங்களின் இரண்டாவது ஆட்டத்தில் மோதவுள்ளன.

இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணியால் முதல் புள்ளியைப் பெற்றுக்கொள்ள முடியும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இந்தியாவின் தினேஸ் கார்த்திக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அவுஸ்திரேலியாவின் டேவிட் வோனரும் வழிநடத்துகின்றனர்.

இவ்விரண்டு அணிகளைப் பொறுத்தவரை டேவிட் வோனரின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியே சற்று பலம் வாய்ந்ததாகத் தென்படுகின்றது. அணியின் துடுப்பாட்ட சிகரமான டேவிட் வோனர் ஒருசில ஓவர்கள் களத்தில் நின்றாலே ஓட்டங்கள் குவிந்துவிடும்.

போதாக்குறைக்கு நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களான இங்கிலாந்தின் ஜொனி பெயார்ஸ்டோவ், இந்தியாவின் மனிஸ் பாண்ட்டே, நியூஸிலாந்தின் கேன் வில்லியம்ஸன் போன்றவர்களும் அதிரடிக்கு காத்திருக்கின்றனர். புவனேஸ்வர்குமார், ரஸிட் கான் ஆகியோர் சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சுக்கு வலுசேர்க்கின்றனர்.

Photo: BCCI/IPL

பெங்களுர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணியுடனான முதல் ஆட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்க முடியாது போனதால் இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல இறுதிவரை இவர்கள் போராடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

ஓட்டங்களை குவிக்குமா கொல்கத்தா?

மறுபக்கம் தினேஸ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எந்த சந்தர்ப்பத்திலும் அதிரடிக்கு திரும்பி எதிரணிக்கு வேட்டு வைக்கலாம்.

சுனில் நரைன், ஒன்ரே ரஸல் ஆகிய மேற்கிந்தியத் தீவுகளின் வீரர்கள் திடீரென அதிரடி காட்டி ஓட்டங்களைக் குவிக்கும் திறமை படைத்தவர்கள். ஆனால், அவர்களால் முதல் போட்டியில் பெரிதாகப் பிரகாசிக்க முடியாமல் போய்விட்டது.

இதனால் இன்றைய போட்டியில் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும் என அவர்கள் முயற்சிப்பார்கள். சுப்பமன் கில், தினேஸ் கார்த்திக், நித்திஸ் ராணா ஆகிய இந்திய வீரர்களுடன் இங்கிலாந்தின் இயன் மோர்கனும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு துடுப்பாட்டத்தில் பலம் சேர்க்கின்றார்.

Photo: BCCI/IPL

அவுஸ்திரேலியாவின் பெட் கமின்ஸ், இந்தியாவின் குல்தீப் யாதவ், சுனில் நரைன் ஆகியோர் கொல்கத்தா அணியின் நம்பிக்கைக்குரிய பந்து வீச்சாளர்களாகத் திகழ்கின்றனர்.

ஐ.பி.எல் வரலாற்றில் இவ்விரண்டு அணிகளும் 17 தடவைகள் நேருக்கு நேர் மோதியுள்ளதுடன் அவற்றில் கொல்கத்தா 10 ஆட்டங்களிலும், ஹைதராபாத் அணி 7 ஆட்டங்களிலும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.