July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவுஸ்திரேலிய ஓபன்; ஜோகோவிச், செரீனா மூன்றாம் சுற்றில்

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் முதல்நிலை வீரரான சேர்பியாவின் நொவெக் ஜோகோவிச் மூன்றாம் சுற்றுக்குள் நுழைந்தார்.

வருடத்தின் முதல் டென்னிஸ் கிராண்ட்ஸலாம் பட்டமான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெறுகிறது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றுப் போட்டி ஒன்றில் நொவெக் ஜோகோவிச் அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோவை எதிர்கொண்டார்.

போட்டியை சவாலாக ஆரம்பித்த ஜோகோவிச் முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். எனினும், அடுத்த செட்டை 7-6 எனும் கணக்கில் பிரான்சிஸ் டியாபோ தனதாக்கினார்.

இதனால் மூன்றாம் செட் ஆட்டம் தீர்மானமிக்கதானது. கடும் சவாலாக நடைபெற்ற அந்த செட்டில் 7-6 என ஜோகோவிச் முன்னிலை பெற்றார்.போட்டி நான்காம் செட்டுக்கு தள்ளப்பட்டதுடன் அதனை 6-3 என ஜோகோவிச் தன்வசப்படுத்தி வெற்றியீட்டினார்.

இதேவேளை, மகளிருக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றுப் போட்டி ஒன்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சேர்பியாவின் நினா ஸ்டொலுனோவை எதிர்த்தாடினார்.

போட்டியை சவாலாக ஆரம்பித்த செரீனா 6-3, 6-0 எனும் நேர் செட்களில் வெற்றிபெற்று மூன்றாம் சுற்றுக்கு தகுதிபெற்றார். அவர் இதுவரை 23 டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்றுமொரு இரண்டாம் சுற்றுப் போட்டியில் ஜப்பானின் நஓமி ஒசாகா 6-2, 6-3 எனும் நேர் செட்களில் பிரான்ஸின் கரோலின் கர்சியாவை வெற்றிகொண்டு மூன்றாம் சுற்றை உறுதிசெய்தார்.