இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடத்தும் கழக மட்டத்திலான சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடர் எதிர்வரும் 17 ஆம் திகதி கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது.
தொழில்சார் வீரர்களுக்காகவும், இலங்கை கால்பந்தாட்டத்தின் அபிவிருத்திக்காகவும் நடத்தப்படும் இந்தப் போட்டித் தொடரில் 10 அணிகள் இரண்டு குழுக்களின் கீழ் மோதவுள்ளன.
புளு ஈகள்ஸ், புளு ஸ்டார், கொழும்பு எவ்.சி, டிபென்டர்ஸ், நிவ் யங்ஸ், ரட்ணம், ரெட் ஸ்டார், ரினோன், ஸீ ஹெவ்க்ஸ், அப்கன்ட்ரி லயன்ஸ் ஆகிய 10 அணிகளே அவை.
இந்த 10 அணிகளும் ஐ.பி.எல் பாணியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
கொவிட் 19 தொற்று அச்சம் காரணமாக போட்டிகள் 45 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கையில் இவ்வாறானதொரு கால்பந்தாட்டத் தொடர் நடத்தப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
தேசிய கால்பந்தாட்ட அணியின் விருத்திக்காகவும், தேசிய கால்பந்தாட்ட அணி வீரர்களை உற்சாகமளித்து ஊக்குவிக்கவும் இந்த கால்பந்தாட்ட தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொவிட் 19 நிலைமையை கருத்திற்கொண்டு சுகாதார வழிமுறைகளை பின்பற்றி தொடரை நடத்தி முடிக்க எதிர்பார்ப்பதாக போட்டி ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.