July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவுஸ்திரேலிய ஓபன்; ஜோகோவிச், நடால், செரீனா வெற்றி

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்பேர்னில் நடைபெறுகின்றது. இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றில் வெற்றிபெற்றார்.போட்டியில் 51-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் லாரா சிஜ்முன்ட் 6-1, 6-1 என்ற நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

அவுஸ்திரேலிய ஓபனில் செரீனாவுக்கு இது 100-வது போட்டியாகும். 39 வயதாகும் செரீனா ஏழு தடவைகள் அவுஸ்திரேலிய ஓபனில் சாம்பியனாகியுள்ளார்.

இதேவேளை, மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில் முன்னாள் சாம்பியனும், தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான ஜப்பானின நஓமி ஒசாகா 6-1, 6-2 என்ற நேர் செட்களில் 39-வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் அனஸ்டசியா பாவ்லிசென்கோவை வெற்றிகொண்டார்.

இன்னொரு போட்டியில் முன்னாள் முதல்நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹலெப் 6-2, 6-1 என்ற நேர்செட கணக்கில் அவுஸ்திரேலியாவின் லிஜிட்டி காப்ரிராவை வீழ்த்தினார்.

ஏனைய போட்டிகளில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், செக்.குடியரசின் பெட்ரா கிவிடோவா உள்ளிட்ட வீராங்கனைகள் வெற்றிபெற்று அடுத்த சுற்றை உறுதிசெய்தனர்.

ஆடவருக்கான ஒற்றையர் நடப்பு சாம்பியனும், முதல்நிலை வீரருமான சேர்பியாவின் நொவெக் ஜோகோவிச் 6-3, 6-1, 6-2 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் ஜெர்மி சார்டியை தோற்கடித்து இரண்டாம் சுற்றுக்குள் நுழைந்தார்.

மற்றொரு போட்டியில் அமெரிக்க ஓபன் சாம்பியனும், தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான டொமினிக் திம் 7-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் கஸகஸ்தானின் மிகைல் குகுஷ்கினை தோற்கடித்து இரண்டாம் சுற்றுக்கு தகுதிபெற்றார். இந்தப் போட்டி 2 மணித்தியாலங்கள், 40 நிமிடங்கள் வரை நீடித்தது.

மற்றைய போட்டிகளில் ஸ்பெய்னின் ரபாயெல் நடால், ஜேர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ, சுவிட்ஸர்லாந்தின் ஸ்டெனிஸ்லாஸ் வவ்ரிங்கா ஆகியோரும் வெற்றியீட்டி அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றுக்கொண்டனர்.