April 29, 2025 9:44:47

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவுஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்!

அவுஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் இந்தியாவில் காலமானார்.

அவருக்கு 59 வயது.ஐ.பி.எல் போட்டிகளின் வர்ணனைக்காக இந்தியாவுக்கு சென்றிருந்த அவர் புதன்கிழமை இரவு வரை வர்ணனையில் ஈடுபட்டிருந்தார்.

மும்பையில் இன்று வியாழக்கிழமை காலை உணவுக்கு பின்னர் வர்ணனைக்கான ஒத்திகையை பார்த்துவிட்டு ஹோட்டல் அறைக்கு திரும்பிய அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். 1984 ஆம் ஆண்டு டெஸ்ட் அறிமுகம் பெற்ற டீன் ஜோன்ஸ், 52 டெஸ்ட் போட்டிகளில், 89 இன்னிங்ஸ்களில் 11 இன்னிங்ஸ்களில் ஆட்டமிழக்காது விளையாடியுள்ளார்.

46.55 எனும் துடுப்பாட்ட சராசரியுடன் 3631 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அதிகபட்சமாக 216 ஓட்டங்களைக் குவித்துள்ள அவர் 11 சதங்களையும், 14 அரைச்சதங்களையும் பூர்த்திசெய்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் சிறந்த சர்வதேச ஒருநாள் வீரராக புகழப்படும் டீன் ஜோன்ஸ் 90களில் 161 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 25 போட்டிகளில் ஆட்டமிழக்காது விளையாடியுள்ளார்.44.61 எனும் துடுப்பாட்ட சராசரியுடன் 6068 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

அதிகபட்சமாக 145 ஓட்டங்களைப் பெற்றுள்ள அவர் 7 சதங்களையும், 46 அரைச்சதங்களையும் கடந்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு முதல் கிரிக்கெட் உலக சாம்பியன் மகுடத்தை ஈட்டிக்கொடுத்த 1987 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணியில் டீன் ஜோன்ஸ் இடம்பெற்றிருந்தார்.

1992 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் டீன் ஜோன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார். டீன் ஜோன்ஸின் மறைவுக்கு உலகப் பிரசித்திபெற்ற கிரிக்கெட் வீரர்கள் பலரும் இரங்கல் வெளியிட்டுள்ளனர்.