photo:England Cricket_twitter
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வெற்றி இலக்கு 420 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை நோக்கி இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 39 ஓட்டங்களை நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் பெற்றிருந்தது.
இதற்கமைய கடைசி நாளில் கைவசம் 9 விக்கெட்டுகள் இருக்கும் நிலையில் இந்தியா மேலும் 381 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது. சுப்மன் கில் 15 ஓட்டங்களுடனும், செட்டிஸ்வர் புஜாரா 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ரோஹித் சர்மா 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் நான்காம் நாளில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 256 ஓட்டங்களுடன் முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது. வொஷிங்டன் சுந்தர் 33 ஓட்டங்களுடனும் ரவிச்சந்திரன் அஸ்வின் 8 ஓட்டங்களுடனும் ஆட்டத்தை ஆரம்பித்தனர்.
ரவிச்சந்திரன் அஷ்வின் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அபாரமாக துடுப்பெடுத்தாடிய வொஸிங்டன் சுந்தர் 85 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றார். இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 337 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 578 ஓட்டங்களைக் குவித்ததற்கமைய 241 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து விக்கெட்டுகளை தக்கவைப்பதைவிட ஓட்டங்களைப் பெறுவதை மாத்திரமே குறிக்கோளாகக் கொண்டு துடுப்பெடுத்தாடியது.
அவர்களின் எதிர்பார்ப்புக்கு அமைவாக 46.3 ஓவர்களில் 178 ஓட்டங்கள் கிடைத்ததுடன் சகல விக்கெட்டுகளும் வீழ்ந்தன. ஆனாலும், அது இங்கிலாந்துக்கு சாதகத்தையே ஏற்படுத்தியதுடன் இந்தியாவின் வெற்றி இலக்கும் 420 எனும் மாபெரும் ஓட்ட எண்ணிக்கையாக நிர்ணயமானது.