13 ஆவது ஐ.பி.எல் இருபது 20 கிரிக்கெட் தொடரில் சிரேஷ்ட வீரர்களைக் கொண்ட தோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இளம் வீரர்களைக் கொண்ட ஸ்ரேயாஸ் ஐயர் வழிநடத்தும் டெல்லி கெபிடெல்ஸ் அணியை இன்றைய ஆட்டத்தில் சந்திக்கிறது.
இந்தப் போட்டியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் சென்னை அணிக்கு ஏற்பட்டுள்ளது. முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்திய போதிலும் இரண்டாவது போட்டியில் ராஜஸ்தானிடம் வீழ்ந்தது.
அணி வீரர்களின் பொறுப்பற்ற துடுப்பாட்டமும், மோசமான பந்துவீச்சுமே சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தன. இதனால் இந்தத் தவறுகளை திருத்திக்கொண்டு விளையாட சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முயற்சிக்கலாம். முரளி விஜய், ஷேன் வொட்சன் ஆகியோர் கடந்த இரண்டு போட்டிகளிலும் பெரிதாக பிரகாசிக்கவில்லை.
தென் ஆபிரிக்காவின் பெப் டு பிலெசி அடுத்தடுத்து அரைச்சதங்களைக் கடந்து நம்பிக்கை அளிக்கும் துடுப்பாட்ட வீரராகவுள்ளார். அணித்தலைவர் தோனி முதலிரண்டு போட்டிகளிலும் ஆறாம் இலக்க வீரராகவே களமிறங்கி ஷாம் கரன், ருதுராஜ் போன்ற வீரர்களுக்கு முன்வரிசையில் வாய்ப்பளித்தார்.
என்றாலும் இந்தப் போட்டியில் தோனி முன்வரிசையில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை அணியின் பந்துவீச்சை ஷாம் கரன் பலப்படுத்துகிறார்.
கடந்த 2 போட்டிகளும் அடங்கலாக அவர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஆனாலும், அனுபவ வீரர்களான ரிவிந்த்ர ஜடெஜா, பியூஸ் சாவ்லா ஆகியோர் ஓட்டங்களை எதிரணிக்கு தாரைவார்த்துள்ளனர். இதன் காரணமாக தென் ஆபிரிக்காவின் இம்ரான் தாஹிருக்கு வாய்ப்பளிக்கப்படலாம்.
அதிர்ஷ்டம் அடிக்குமா டெல்லிக்கு?
மறுபக்கம் அதிர்ஷ்டம் மிக்க அணியாக ஸ்ரேயாஸ் ஐயரின் டெல்லி கெபிடெல்ஸ் அணி காணப்படுகின்றது. முதல் போட்டியில் பஞ்சாப் அணியை சூப்பர் ஓவரில் வெற்றிகொண்ட உற்சாகத்தில் வீரர்கள் உள்ளனர்.
டெல்லி அணி என்னதான் அதிர்ஷ்டம் மிக்கதாக இருந்தாலும் தோனியின் அதிர்ஷ்டத்துக்கும், அனுபவத்துக்கும் முன்னால் பலிக்குமா என்பது சந்தேகமே.
இதனால் முழுத்திறனையும் வெளிப்படுத்தினால் மாத்திரமே டெல்லி அணியால் வெற்றிபெற முடியும். ஷிகர் தவான், ரிஷப் பாண்ட், அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் துடுப்பாட்டத் தூண்களாக அணிக்கு நம்பிக்கை அளிக்கின்றனர்.
பஞ்சாபுடனான போட்டியில் முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ரவிச்சந்திரன் அஸ்வின் உபாதைக்குள்ளானமை டெல்லி அணிக்கு பேரிழப்பாகவுள்ளது.
இவருக்கு பதிலாக அமித் மிஸ்ரா களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.பி.எல் வரலாற்றில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் இதுவரை 21 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தியுள்ளது.
அவற்றில் 15 இல் சென்னையும், டெல்லி 6 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. 2018-2019 பருவ காலத்தில் 3 போட்டிகளிலும் சென்னை அணியே வெற்றிபெற்றுள்ளது.