Photo-Bangladesh Cricket_twitter
சட்டகுரோமில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பங்களாதேஷ் 430 ஓட்டங்களையும், மேற்கிந்தியத் தீவுகள் 259 ஓட்டங்களையும் பெற்றன. நான்காம் நாளில் பங்களாதேஷ் 8 விக்கெட் இழப்புக்கு 223 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்தியது.
அதற்கமைய வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 395 ஓட்டங்களை நோக்கி இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 விக்கெட் இழப்புக்கு 110 ஓட்டங்களுடன் ஆட்டத்தின் கடைசி நாளான இன்று களமிறங்கியது. அதன்படி மேற்கிந்திய தீவுகள் வெற்றிபெற மேலும் 284 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன், கைவசம் 7 விக்கெட்டுகளே இருந்தன.
இதனால் பங்களாதேஷ் இலகுவாக வெற்றிபெற்றுவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், அதனை பொய்யாக்கிய மேற்கிந்திய தீவுகளின் இளம் வீரரான கைல் மேயர்ஸ் அபாரமான அதிரடியை வெளிப்படுத்தி பங்களாதேஷ் அணி வீரர்களை திக்குமுக்காட வைத்தார்.
ஐந்தாம் இலக்க வீரராக களமிறங்கிய கைல் மேயர்ஸ் 310 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 20 பௌண்டரிகளுடன் 210 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று வெற்றியை உறுதிசெய்தார். இதன் மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்த வீரராகவும் அவர் பதிவானார்.
மற்றொரு அறிமுக வீரரான ரும்ஹா பொன்னர் 86 ஓட்டங்களைப் பெற்று வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்கினார். மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட் இழப்புக்கு 395 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை அடைந்தது.
இதன்மூலம் டெஸ்ட் தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலை பெற்றுள்ளது.
3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரை 3-0 என பங்களாதேஷ் வென்ற நிலையில் இந்தத் தோல்வி பெரும் வியப்பை ஏற்படுத்துவதாய் அமைந்துள்ளது.