Photo:England Cricket_twitter
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அணித்தலைவர் ஜோ ரூட்டின் அபார இரட்டை சதத்துடன் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 555 ஓட்டங்களை இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பெற்றுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் 3 விக்கெட் இழப்புக்கு 263 ஓட்டங்களுடன் இங்கிலாந்து அணி இரண்டாம் நாளில் முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது.
அணித்தலைவர் ஜோ ரூட் 128 ஓட்டங்களுடன் களமிறங்கினார்.இந்திய அணிக்கு பெரும் தலையிடியாக இருந்த ஜோ ரூட் சிறப்பாக ஓட்டங்களைக் குவித்தார். பென் ஸ்டோக்ஸ் 87 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதிலும் ஜோ ரூட் தனது ஐந்தாவது இரட்டை சதத்தைக் கடந்து இங்கிலாந்து அணியை ஸ்திரமான நிலைக்கு கொண்டுசென்றார்.
ஓலி போப் 34 ஓட்டங்களுடனும், ஜோஸ் பட்லர் 28 ஓட்டங்களுடனும், டொம் பெஸ் 28 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். தனி ஒருவராக பிரகாசித்து இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்த ஜோ ரூட் 377 பந்துகளை எதிர்கொண்டு 2 சிக்ஸர்கள், 19 பௌண்டரிகளுடன் 218 ஓட்டங்களைக் குவித்தார்.
இரண்டாம் நாள் முழுவதும் இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடியுள்ளதுடன், இந்த இரண்டு நாட்களும் இந்திய பந்துவீச்சாளர்களால் வீசப்பட்ட 180 ஓவர்களும் மிக லாவகமாக எதிர்கொள்ளப்பட்டது.
பந்துவீச்சில் இஸான்ந் சர்மா, ஜஸ்பிரிட் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின், சஹபாஸ் சதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்தப் போட்டியைப் பொறுத்தவரை தற்போதைய நிலையில் வெற்றி தோல்வியின்றி முடியவே அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
ஆனாலும், மூன்றாம் நாளில் இங்கிலாந்து அபாரமாகப் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்திய அணியை வெற்றிகொள்ள முடியும். இந்தியா திறமையாக துடுப்பெடுத்தாடினால் போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்துக்கொள்ள முடியும்.