October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விறுவிறுப்பான கட்டத்தில் பாகிஸ்தான்- தென் ஆபிரிக்கா டெஸ்ட்

Photo:Cricket Pakistan_twitter

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 200 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

ராவல்பிண்டியில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 272 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பதிலளித்தாடிய தென் ஆபிரிக்கா 4 விக்கெட் இழப்புக்கு 106 ஓட்டங்களுடன் இரண்டாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது.

அணித்தலைவர் குவின்டன் டி கொக் 24 ஓட்டங்களுடனும், டெம்பா பவுமா 15 ஓட்டங்களுடனும் களமிறங்கினர். குவின்டன் டி கொக்கினால் மேலும் 5 ஓட்டங்களையே பெற்றுக்கொள்ள முடிந்தது. ஏனைய வீரர்களாலும் பெரிதாக பிரகாசிக்க முடியாமல் போக தென் ஆபிரிக்க அணியின் முதல் இன்னிங்ஸ் 201 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது.

டெம்பா பவுமா ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களைப் பெற்றார். அதுவே அணி சார்பில் ஒரு வீரர் பெற்ற அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையாகும். இரண்டு வீரர்கள் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சில் ஹசன் அலி 15.4 ஓவர்களில் 54 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

71 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி ஓட்டம் பெறுவதற்கு முன்பு முதல் விக்கெட்டை இழந்தது. டிம்ரான் பட் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார்.

அபிட் அலி, அணித்தலைவர் பாபர் அசாம், பவாட் ஆலம் ஆகியோரும் சொற்ப ஓட்டங்களுடன் வெளியேறினர்.
அசார் அலி 33 ஓட்டங்களையும், பஹீம் அஷ்ரப் 29 ஓட்டங்களையும் பெற்று அணிக்கு ஆறுதல் அளித்தனர்.

பாகிஸ்தான் அணி 129 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த போது மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

மொஹமட் ரிஸ்வான் 28 ஓட்டங்களுடனும், ஹசன் அலி ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

ஜோர்ஜ் லின்டே 3 விக்கெட்டுகளையும், கேஷவ் மகாராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.