February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹெட்ரிக் சதமடித்தார் ஜோ ரூட்; வலுவான நிலையில் இங்கிலாந்து

தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் தமது அணியை வலுவான நிலைக்கு உயர்த்தியுள்ளார். அத்துடன் டெஸ்ட் அரங்கில் தொடர்ச்சியாக மூன்று சதங்களை விளாசிய பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக 5 ஆம் திகதி ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் இந்த ஆற்றலை வெளிப்படுத்தினார். போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 263 ஓட்டங்களை ஆட்டநேர முடிவில் பெற்றிருந்தது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இங்கிலாந்து 63 ஓட்டங்களுக்கு முதலிரண்டு விக்கெட்டுகளையும் இழந்தது. ரொரி பேர்ன்ஸ் 33 ஓட்டங்களுடனும், டேன் லோரன்ஸ் ஓட்டமின்றியும் ஆட்டமிழந்தனர்.

எனினும் அணித்தலைவர் ஜோ ரூட்டும் டொம் சிப்லியும் இரண்டாம் விக்கெட்டுக்காக 200 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை வலுப்படுத்தினர். அதற்காக இவர்கள் 64 ஓவர்களை எதிர்கொண்டார்கள். டொம் சிப்லி 87 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அபாரமாகவும், அதிரடியாகவும் துடுப்பெடுத்தாடிய ஜோ ரூட் தனது 20 ஆவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்திசெய்தார். இதன்மூலம் அதிக டெஸ்ட் சதங்களைப் பெற்ற இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் இரண்டாமிடத்தை முன்னாள் வீரரான கிராம் கூச்சுடன் பகிர்ந்து கொண்டார்.

முதல் நாள் ஆட்டம் முடிவுக்குவரும் ஓவரில் 3 பந்துகள் எஞ்சியிருந்த போது டொம் சிப்லி ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது. ஜஸ்பிரிட் பும்ரா 2 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.