January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.பி.எல் 2020: மும்பைக்கு முதல் வெற்றி!

Photo: BCCI/ IPL

Photo: BCCI/ IPl

இம்முறை ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் வெற்றியை ஈட்டியுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 49 ஓட்டங்களால் வெற்றிகொண்டுள்ளது.

அபுதாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித்தலைவர் தினேஸ் கார்த்திக் களத்தடுப்பை தெரிவுசெய்தார்.

அதன்படி முதலில் துடுப்பெத்த தென் ஆபரிக்காவின் குவின்டன் டி கொக் – அணித்தலைவர் ரோஹித் சர்மா ஜோடியால் பெரிதாகப் பிரகாசிக்க முடியவில்லை. குவின்டன் டி கொக் 3 பந்துகளில் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

எனினும், அடுத்து இணைந்த அணித்தலைவர் ரோஹித் சர்மா- சூர்யகுமார் யாதவ் ஜோடி இரண்டாம் விக்கெட்டுக்காக 57 பந்துகளில் 90 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சவாலான நிலைக்கு கொண்டுவந்தது. சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 47 ஓட்டங்களைப் பெற்றார்.

Photo: BCCI/ MI

அதிரடி காட்டிய ரோஹித் சர்மா 54 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 80 ஓட்டங்களைக் குவித்தார்.

அவர் விளாசிய ஒவ்வொரு சிக்ஸரும் வெற்றியின் மீதான நம்பிக்கையை அதிகரித்தது. சௌரவ்ப் திவாரி 21 ஓட்டங்களையும், ஹர்திக் பாண்ட்யா 18 ஓட்டங்களையும், கிரான் பொலார்ட் 13 ஓட்டங்களையும் பெற்று மும்பை அணியை வலுவான நிலைக்கு கொண்டுவந்தனர்.

மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்களைக் குவித்தது. பந்துவீச்சில் சிவம் மவி 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், சுனில் நரைன், ஒன்ரே ரஸல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

100 ஓட்டங்களுக்கு 15 ஓவர்கள் வீண்!

கடினமான இலக்கான 196 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2.4 ஓவர்களில் 14 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்து கடும் பின்னடைவுக்குள்ளானது. சுப்மன் கில் 7 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

தொடர்ந்து சுனில் நரைன் 9 ஓட்டங்களுடன் களத்தைவிட்டு அகன்றார். அணித்தலைவர் தினேஸ் கார்த்திக் 23 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 30 ஓட்டங்களைப் பெற்றார்.

மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் மந்த கதியில் ஓட்டங்களைப் பெற்று ஏமாற்றமளித்தனர். கொல்கத்தா அணி 100 ஓட்டங்களை எட்டுவதற்கே 15 ஓவர்களை வீணடித்தது.

நித்திஸ் ரானா 24 ஓட்டங்களுடனும், ஒய்ன் மோர்கன் 16 ஓட்டங்களுடனும், ஒன்ரே ரஸல் 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். பெட் கமின்ஸ் 12 பந்துகளில் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 33 ஓட்டங்களைப் பெற்றார். ஏனைய வீரர்களால் பெரிதாகப் பிரகாசிக்க முடியாது போனது.

பின்வரிசையில் களமிறங்கிய வீரர்கள் ஓட்டங்களைப் பெற முடியாமல் விரைவாக ஆட்டமிழந்தனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்களையே பெற முடிந்தது.

ட்ரென் பௌல்ட், ஜேம்ஸ் பெட்டின்சன், ஜஸ்பிரிட் பும்ரா, தீபக் சார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இது இவ்வருட ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி பெற்ற முதல் வெற்றியாகும்.

முதல் போட்டியில் சென்னையிடம் தோல்வியடைந்த போதிலும் – இன்று தனது இரண்டாவது ஆட்டத்தில் வெற்றிபெற்று ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது மும்பை.