தனது வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க சில இயக்குனர்கள் விரும்புவதாக தமிழக கிரிக்கெட் வீரரான நடராஜன் கூறுகிறார்.எனினும் தற்போதைக்கு தனக்கு அதில் ஆர்வமில்லை என்றும் நடராஜன் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற தமிழக வீரரான நடராஜன் அவுஸ்திரேலிய விஜயத்தில் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் பதிவானார். வறிய குடும்பத்தை சேர்ந்த இவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க தென்னிந்திய திரைப்பட இயக்குனர்கள் ஆர்வமாக இருப்பதாகவும், அதனை தற்போது தாம் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
ஐ.பி.எல் தொடரின் போது 12 ஆம் இலக்க வீரராக இருந்த நடராஜன் வலைப்பயிற்சியில் இந்திய வீரர்களுக்கு மிகுந்த ஒத்துழைப்பு வழங்கினார். இவரது பந்துவீச்சு ஆற்றலுடன் இந்திய அணி அரிய பல வெற்றிகளை ஈட்டியது.
உடல் எடையைக் குறைத்து வலிமையாக வாழ்வதற்கு இந்திய கிரிக்கெட் சபை தமக்கு உந்துசக்தி அளித்ததாகவும் நடராஜன் தெரிவித்துள்ளார்.
எப்பொழுதும் சாதாரண மனிதராக வாழவே தாம் விரும்புவதாகவும், 2015 ஆம் ஆண்டில் பந்துவீச்சு தடைக்குட்பட்ட போது வாழ்க்கையே முடிந்துவிட்டதாக தாம் நினைத்ததாகவும், அதன் பிறகு அந்த நிலைமையிலிருந்து மீண்டு வந்தமை மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் அவர் தெரிவிக்கிறார்.
சர்வதேச இருபது 20, சர்வதேச ஒருநாள், டெஸ்ட் போட்டிகளை உள்ளடக்கிய இத்தொடரை தாம் அதிகம் நேசிப்பதாக 28 வயதுடைய நடராஜன் தெரிவித்துள்ளார்.