
இருபது 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்ற ஆவலில் இருப்பதாக டெஸ்ட் அணித்தலைவரான ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் சபை டெஸ்ட், சர்வதேச ஒருநாள் மற்றும் சர்வதேச இருபது 20 போட்டிகளுக்கு வெவ்வேறு அணிகளை தெரிவு செய்துவருகின்றது. டெஸ்ட் அணிக்கு ஜோ ரூட்டும், சர்வதேச ஒருநாள், இருபது 20 அணிகளுக்கு ஒய்ன் மோர்கனும் தலைவராக செயற்படுகின்றனர்.
ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜொப்ரா ஆச்சர் ஆகியோர் மாத்திரமே மூன்று வகையான அணிகளிலும் இடம்பிடித்து வருகின்றனர். கொரோனா முடக்கத்துக்கு பின்னர் அவுஸ்திரேலியாவுடன் நடைபெற்ற இருபது 20 தொடருக்கான இங்கிலாந்து குழாத்தில் ஜோ ரூட்டுக்கு இடம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இந்தியாவில் இவ்வருடம் நடைபெறவுள்ள இருபது 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து குழாத்தில் இடம்பிடிக்க வேண்டுமென்ற அவா தன்னுள் இருப்பதாக ஜோ ரூட் குறிப்பிட்டுள்ளார்.
இருபது 20 உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்து வலுவான அணியை களமிறக்க வேண்டும். மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது. அற்புதமான வீரர்களே எமது அணியில் இடம்பெற்றுள்ளார்கள். அவர்களுடன் நானும் அணியில் இடம்பிடிக்க வேண்டும். என்னாலும் இருபது 20 போட்டிகளில் ஓட்டங்களைக் குவிக்க முடியுமென நம்புகிறேன்’’ என்று ஜோ ரூட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.