July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீண்டும் சிக்கலில் அவுஸ்திரேலிய ஓபன்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவுஸ்திரேலிய ஓபன் திட்டமிட்டபடி நடத்தப்படுமா எனும் சந்தேகம் எழுந்துள்ளது. போட்டி தொடரில் பங்கேற்கவிருந்த வீர,வீராங்கனைகள் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டதால் இந்த நிலை உருவாகியுள்ளது.

இதனால் ஹோட்டலில் தங்கியிருக்கும் வீர,வீராங்கனைகள், பயிற்றுநர்கள், உதவியாளர்கள் என 500 க்கு மேற்பட்டோரை தனிமைப்படுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு கொரோனா பரிசோதனை நடத்தி கொரோனா இல்லை என உறுதிசெய்யப்படுவோரை போட்டித் தொடரில் இணைத்துக்கொள்வதென திட்டமிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், புதன்கிழமை நடைபெறவிருந்த ஆறு பயிற்சிப் போட்டிகளையும் கைவிடுவதாக போட்டி ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. எனவே, தொடரை திட்டமிட்டபடி ஆரம்பிக்க முடியுமா எனும் சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

சர்வதேச டென்னிஸ் அரங்கில் ஓராண்டில் நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுக்கான தொடர்கள் நடத்தப்படுவதுடன் அதில் வருடத்தின் முதல் தொடராக அவுஸ்திரேலிய ஓபன் நடத்தப்படுவது வழமையாகும். ஜனவரி மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட வேண்டிய இந்தத் தொடர் சில நாட்கள் தாமதித்து பெப்ரவரி இரண்டாம் வாரத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.