இங்கிலாந்து கிரிக்கெட் அணித்தலைவரான ஜோ ரூட் தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிராக சென்னையில் விளையாடத் தயாராகியுள்ளார். இது மிகவும் சிறப்பானது என ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
ஜோ ரூட்டுக்கு தற்போது 30 வயதாகின்றது.அவர் இதுவரை இங்கிலாந்து சார்பாக 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 100 ஆவது போட்டியில் விளையாடும் பட்சத்தில் அவர் அந்த மைல்கல்லை எட்டிய 15 ஆவது இங்கிலாந்து வீரர் எனும் சிறப்பைப் பெறுவார்.
இந்தப் பட்டியலில் அலிஸ்டயார் குக் முதலிடத்தை வகிக்கிறார். அவர் 161 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஜேம்ஸ் அன்டர்சன் (157 டெஸ்ட்), ஸ்டுவர் பிரொட் (144 டெஸ்ட்), அலக் ஸ்டுவர்ட் (133 டெஸ்ட்) கிராம் கூச், இயன் பெல் (118 டெஸ்ட்) ஆகியோர் 100 டெஸ்ட் போட்டி மைல்கல்லை கடந்துள்ளனர்.
இதேவேளை, நூறாவது டெஸ்டில் விளையாடுவது மகிழ்ச்சிக்குரியது எனத் தெரிவித்துள்ள ஜோ ரூட், இந்திய அணி மிகவும் வலுவானது எனவும், எனினும் இங்கிலாந்து வீரர்கள் திறமையை வெளிப்படுத்தி சவால் விடுப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
நாக்பூரில் டெஸ்ட் அறிமுகம் பெற்ற ஜோ ரூட் 99 டெஸ்ட் போட்டிகளில் 8249 ஓட்டங்களை குவித்து 49.39 எனும் சராசரியைப் பெற்றுள்ளார். அதில் 19 சதங்களும், 49 அரைச்சதங்களும் அடங்குகின்றன.
ஜோ ரூட் இறுதியாக பங்கேற்ற இலங்கை விஜயத்தின் போது இரட்டை சதம் மற்றும் சதம் விளாசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.