January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டெஸ்ட் உலக சாம்பியன்ஸிப் இறுதிக்கு நியூஸிலாந்து தகுதி; இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா கடும் போட்டி

டெஸ்ட் உலக சாம்பியன்ஸிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை முதல் அணியாக நியூஸிலாந்து பெற்றுள்ளது. எனினும், இறுதிப் போட்டியில் விளையாடும் மற்றைய அணியை தீர்மானிப்பதில் இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கிடையில் கடும் சவால் நிலவுகின்றது.

இதனை தீர்மானிக்கும் ஒன்றாக இங்கிலாந்து – இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் மாற்றம் பெற்றுள்ளது.

அவுஸ்திரேலிய மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் ரத்துச் செய்யப்பட்டதன் காரணமாகவே இந்த சிக்கலான நிலை தோன்றியுள்ளது.

2019 முதல் இவ்வருடம் மார்ச் வரை நடைபெறும் உலக சாம்பியன் ஸிப் டெஸ்ட் தொடர்களில் வெற்றிபெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பெறவுள்ளன.

அந்தப் பட்டியலில் நியூஸிலாந்து முதலிடத்திலும், இந்தியா இரண்டாமிடத்திலும், அவுஸ்திரேலியா மூன்றாமிடத்திலும் உள்ளன. இங்கிலாந்து நான்காவது இடத்தில் உள்ளது.

தென் ஆபிரிக்க மற்றும் அவுஸ்திரேலிய தொடர் ரத்துச் செய்யப்பட்டுள்ளதால் நியூஸிலாந்தும் இந்தியாவும் இறுதிப் போட்டியில் விளையாடவே அதிக வாய்ப்புகள் உள்ளன.

இந்தத் தொடரை இந்தியா 2-0 என அல்லது 3-0, 3-1, 4-0 என எந்தவகையில் கைப்பற்றினாலும் டெஸ்ட் உலக சாம்பியன்ஸிப்பின் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற முடியும் என கணிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தைப் பொறுத்தவரை இந்தத் தொடரில் 3-0, 3-1, 4-0 என வெற்றிபெற்றால் மாத்திரமே இறுதிப் போட்டிக்கான சந்தர்ப்பம் கிடைக்கும். 1-0 என இந்தியாவோ அல்லது இங்கிலாந்தோ வெற்றிபெற்றால் அப்போது அவுஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

டெஸ்ட் உலக சாம்பியன்ஸிப்பின் இறுதிப் போட்டி எதிர்வரும் ஜுன் மாதம் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.