இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இவ்வாரம் ஆரம்பமாகின்றது.
முதலிரண்டு போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், முதல் போட்டி எதிர்வரும் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்தப் போட்டிகளை மைதானத்துக்கு நேரடியாக சென்று பார்வையிட ரசிகர்களுக்கு அனுமதியில்லை என இந்திய கிரிக்கெட் சபை ஏற்கனவே அறிவித்திருந்தது. எனினும், இந்தியாவில் தற்போது கொவிட் விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதுடன் முதலாம் திகதியிலிருந்து போட்டிகளை கண்டுகளிக்க 50 வீத ரசிகர்களுக்கு அனுமதி அளிப்பதாக தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது.
இதனையடுத்து தமிழ் நாடு மாநில கிரிக்கெட் சபை போட்டிகளின் போது 50 வீத ரசிகர்களை அனுமதிக்க இடமளிக்குமாறு இந்திய கிரிக்கெட் சபையிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்தக் கோரிக்கைக்கு இந்திய கிரிக்கெட் சபை அனுமதி அளித்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் பெப்ரவரி 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியை மைதானத்திற்கு சென்று நேரடியாக கண்டுகளிக்க 50 வீத ரசிகர்களுக்கு அனுமதி அளிப்பதாக இந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியின் போது ஊடகர்கள், கழக உறுப்பினர்களுக்கு மைதான அனுமதியை வழங்குவதாகவும் இந்திய கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.