July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவுஸ்திரேலிய ஓபன் பயிற்சிப் போட்டியில் செரீனா வெற்றி

Photo:AusOpen_ twitter

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடருக்கான பயிற்சிப் போட்டியில் அமெரிக்க நட்சத்திர வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் வெற்றிபெற்றுள்ளார்.

சர்வதேச டென்னிஸ் அரங்கில் ஓராண்டில் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டி தொடர்கள் நடத்தப்படுகின்றன. அவுஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன்,விம்பிள்டன் ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் ஆகிய தொடர்கள் நடைபெற்றுவருகின்றன.

வழமையாக ஜனவரி இரண்டாம் வாரத்தில் மெல்போர்னில் ஆரம்பிக்கப்பட வேண்டிய இந்த டென்னிஸ் தொடர் கொரோனா பிரச்சினை காரணமாக ஒரு மாதம் தள்ளிப் போயுள்ளது.

எவ்வாறாயினும் தொடரை இவ்வார இறுதியில் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தொடருக்கான வீர, வீராங்கனைகள் மெல்போர்னில் உயர் பாதுகாப்பு வலயத்தில் சுயதனிமைப்படுத்தலில் இருந்துவிட்டு தற்போது பயிற்சிகளை ஆரம்பித்துள்ளனர். ஏற்கனவே தாம் உபாதையிலிருந்தாலும் தொடர் தாமதாக ஆரம்பிக்கப்படுவதால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளதாக செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

தொடரை சவாலாக எதிர்கொள்ள தயாராகியுள்ளதாகவும் உபாதையிலிருந்து மீண்டு வந்துள்ள தன்னால் இந்த முறை மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் செரீனா வில்லியம்ஸ் குறிப்பிடுகிறார்.

சர்வதேச டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெற்றிகொண்ட ஜேர்மனி முன்னாள் நட்சத்திரம் மார்கட் தச்சரின் சாதனையை சமப்படுத்த செரீனாவுக்கு மேலும் ஒரு சாம்பியன் பட்டம் மாத்திரமே தேவைப்படுகிறது.

39 வயதுடைய செரீனா வில்லியம்ஸ் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளதுடன், இந்தமுறை பயிற்சிகளையும் சிறப்பாக நிறைவுசெய்துள்ளார். அவுஸ்திரேலியாவின் டரியா கர்விலோவாவுக்கு எதிரான பயிற்சிப் போட்டியை 6-1, 6-4 எனும் நேர் செட்களில் செரீனா வெற்றிகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.