பிரபல கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸியின் ஒப்பந்த விவரங்களை வெளியிட்ட ஸ்பெயின் பத்திரிகையொன்றுக்கு எதிராக பார்சிலோனா கழகம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பார்சிலோனா கழகத்துடனான லியோனல் மெஸியின் நான்கு வருட ஒப்பந்தம் 2021 ஜுன் 30 ஆம் திகதி வரை 5,552 மில்லியன் யுரோ மதிப்புடையது என்றும் மெஸி ஒரு வருடத்திற்கு 1,388 மில்லியன் யுரோக்களைப் பெறுவதாகவும் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்பெயின் பத்திரிகையின் செய்தியை மறுத்துள்ள பார்சிலோனா கழகம், அது தொடர்பான அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.
குறித்த ஒப்பந்த விவரங்களை மறுத்துள்ள பாசிலோனா, ஆவணத்தை வெளியிட்ட எல் முண்டோ என்ற பத்திரிகைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
லியோனல் மெஸியின் பெயரை இழிவுபடுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளில், பார்சிலோனா கழகம் மெஸிக்கு முழு ஆதரவையும் வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது.