November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ராஜஸ்தானிடம் வீழ்ந்தது சென்னை;சஞ்சு சாம்சன் – டு பிலெசிஸ் அரைச்சதம்!

Photo: BCCI/ IPL

இந்தியன் பிரிமியர் லீக் இருபது20 கிரிக்கெட் தொடரில் மஹேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 16 ஓட்டங்களால் வெற்றிகொண்டுள்ளது.

இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி நிர்ணயித்த 217 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பதிலளித்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.

சார்ஜாவில் நடைபெற்ற ஆட்டத்தில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனி முதலில் துடுப்பெடுக்கும் வாய்ப்பை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு வழங்கினார்.

யசாவி ஜஸ்வால் மற்றும் அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் ஜோடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினாலும் அவர்களால் 2.2 ஓவர்களில் 11 ஓட்டங்களையே பகிர முடிந்தது. யசாவி ஜஸ்வால் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

சஞ்சு சாம்சன் அபாரம்

ஆனாலும், அடுத்துக் களமிறங்கிய சஞ்சு சாம்சன் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்து ராஜஸ்தான் அணியை வலுவான நிலைக்கு கொண்டுவந்தார்.

Photo: BCCI/Chennai Super Kings

சென்னை அணியின் பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த சாம்சன், 32 பந்துகளில் 9 சிக்ஸர்களுடன் 74 ஓட்டங்களைக் குவித்தார். ஸ்டீவன் ஸ்மித் – சஞ்சு சாம்சன் ஜோடி இரண்டாம் விக்கெட்டுக்காக 56 பந்துகளில் 121 ஓட்டங்களைப் பகிர்ந்தது. தொடர்ந்து வந்த டேவிட் மிலர் ஒரு பந்தைக்கூட எதிர்கொள்ள முடியாது ரன்அவுட் ஆனார்.

ரொபின் உத்தப்பா 5 ஓட்டங்களைப் பெற்று பெப் டு பிலெசியின் அபார பிடியெடுப்பில் நடையைக் கட்டினார். 10 ஓவர்களில் 119 ஓட்டங்களைக் குவித்த ராஜஸ்தான் ரோயல் அணியின் ஓட்ட வேகம் அதன் பின்பு மந்த கதியானது.

என்றாலும், தனியாகப் பிரகாசித்த அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 47 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 69 ஓட்டங்களைப் பெற்றார்.

பின்வசரிசை வீரரான ஜொப்ரா ஆச்சர் 8 பந்துகளில் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களைப் பெற்றார். ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 216 ஓட்டங்களைக் குவித்து இவ்வருட தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்ற முதல் அணியாக பதிவானது.

பந்துவீச்சில் ஸாம் கரன் 3 விக்கெட்டுகளையும், தீபக் ச்சார், பியூ ச்சாவ்லா, லுங்கி நிகிடி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

கடினமான இலக்கு

கடினமான இலக்கான 217 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக சேன் வாட்சன் – முரளி விஜய் ஜோடி 6.4 ஓவர்களில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்தது. சேன் வாட்சன் 21 பந்துகளில் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடங்கலாக 33 ஓட்டங்களைப் பெற்றார்.

Photo: BCCI/Rajasthan Royals

முரளி விஜய் 21 ஓட்டங்களுடனும், ஸாம் கரன் 17 ஓட்டங்களுடனும் வெளியேறினர். சிறப்பாக ஆடிய பெப் டு பிலெசி இவ்வருட தொடரில் தனது இரண்டாவது அரைச்சதத்தைப் பூர்த்திசெய்தார். 37 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 சிக்ஸர்கள் ஒரு பவுண்டரியுடன் 72 ஓட்டங்களை விளாசினார்.

அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனி 17 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்களையும், கேதர் யாதவ் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்த போதிலும் அது வெற்றிக்கு போதுமானதாக இருக்கவில்லை.

சென்னை அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ஓட்டங்களையே பெற முடிந்தது. ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இம்முறை தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. சென்னை அணி இவ்வருடம் தனது முதல் தோல்வியை ராஜஸ்தானுக்கு எதிராகத் தழுவியுள்ளது.