இந்திய கிரிக்கெட் சபை 2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய ஐ.பி.எல் லீக் இருபது 20 கிரிக்கெட் தொடர் இவ்வருடம் 14 ஆக ஆவது தடவையாக நடைபெறவுள்ளது.
இந்தத் தொடரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் வாரத்தில் ஆரம்பிக்க இந்திய கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருட தொடர் சுமார் 6 மாதங்கள் தாமதித்து இந்தியாவிலிருந்து மாற்றப்பட்டு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்தப்பட்டது.
இந்நிலையில் இவ்வருடத் தொடரை இந்தியாவிலேயே நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் ஐ.பி.எல் இருபது20 தொடரை ஆரம்பித்து ஜுன் முதல் வாரத்தில் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் சபையின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
டெஸ்ட் உலக சாம்பியன்ஸிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதிபெறும் என எதிர்பார்க்கப்படுவதால் இவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளது.
டெஸ்ட் உலக சாம்பியன்ஸிப் இறுதிப் போட்டியை ஜுன் 18 ஆம் திகதி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தமுறை ஐ.பி.எல் இருபது20 கிரிக்கெட் தொடரில் 8 அணிகள் பங்கேற்பதுடன், அந்த அணிகளுக்கான வீரர்களை தெரிவுசெய்யும் ஏலம் பெப்ரவரி 8 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது. அதன் பின்னர் ஐ.பி.எல் போட்டி அட்டவணை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.