January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

87 ஆண்டுகால ரஞ்சி தொடர் முதல் தடவையாக ரத்து

இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்றதும் பழைமையான உள்ளுர் கிரிக்கெட் தொடராக ரஞ்சி கிண்ணத் தொடர் திகழ்கின்றது. 87 வருட வரலாற்றைக் கொண்ட இந்தத் தொடர் முதல் தடவையாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தமுறை ரத்துச்செய்யப்பட்டுள்ளது.

ரஞ்சி கிண்ணக் கிரிக்கெட் தொடர் 1934 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்கு சர்வதேச தரம்வாய்ந்த வீரர்களை கண்டறியும் தொடராகவே ரஞ்சி கிண்ணம் காணப்படுகின்றது.

மிகுந்த சவால் மிக்க இந்த தொடரில் திறமையை வெளிப்படுத்தும் வீரர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படுவது வழமையானது.

கடந்த வருட ரஞ்சி கிண்ணக் கிரிக்கெட் தொடரில் 38 அணிகள் போட்டியிட்டன. 4 நாட்கள் கொண்ட இந்த கிரிக்கெட் போட்டித் தொடரில் சவுராஸ்டிரா அணி சாம்பியனானது. இவ்வருட தொடரை சிறப்பாக நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளதால் தொடரை இவ்வருடம் நடத்துவதில்லை எனும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பிரச்சினை பூதாகரமாகியுள்ளதால் வீரர்களை பாதுகாப்பு வலயத்தில் வைத்து பராமரித்து நீண்ட நாட்களுக்கு ரஞ்சி கிண்ணக் கிரிக்கெட் தொடரை நடத்துவது சிரமமாகும். இது குறித்து மாநில கிரிக்கெட் சங்கங்களுடன் இந்திய கிரிக்கெட் சபை ஆலோசித்துள்ளது.

மாநில கிரிக்கெட் சங்க உறுப்பினர்களில் பெரும்பாலானோர் இவ்வருடம் ரஞ்சி கிண்ணத் தொடரை நடத்தமாலிருக்க ஆலோசனை வழங்கியுள்ளனர். இதனால் 87 ஆண்டுகளுக்கு பின்னர் இவ்வருடம் தொடரை நடத்தாமல் இருப்பதெனும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.