January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.பி.எல்: தோனியின் அனுபவத்தை வெல்லுமா ஸ்மித்தின் ஆர்வம்?

Photo: BCCI/Rajasthan Royals

இந்தியன் பிரிமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் சாம்பியனான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இவ்வருட தொடரில் முதல் போட்டியை சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக இன்று எதிர்கொள்கின்றது.

இந்தியன் பிரிமியர் லீக் அங்குரார்ப்பண தொடரில் 2008 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு சாம்பியன் பட்டம் ஈட்டிக்கொடுத்த தலைவர் என்ற சிறப்பு நட்சத்திர சுழல்பந்து வீச்சாளரான அவுஸ்திரேலியாவின் சேன் வோர்னுக்கு உள்ளது. அனுபவமற்ற இளம் வீரர்களுடன் அவர் தனது அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

ஆனாலும், 2011 ஆம் ஆண்டில் வோர்ன் ஓய்வுபெற்ற பின்னர் ராஜஸ்தான் அணி அந்தளவுக்கு சிறப்பான முன்னேற்றமில்லாத அணியாகவே காணப்படுகிறது. இந்த முறை அணியை அஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் வழிநடத்துகிறார். இவர் 2014 ஆம் ஆண்டில் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்ததுடன் 2018 ஆம் ஆண்டில் தென் ஆபிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஓராண்டு தடைக்குட்பட்டிருந்தார்.

இந்த முறை அணியைப் பொறுத்தமட்டில் ரொபின் உத்தப்பா,டேவிட் மிலர், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரே பெயர் குறிப்பிட்டுக் கூறக் கூடிய துடுப்பாட்ட வீரர்களாக உள்ளனர். ஏனையோர் பெரிதாக அறிமுகமில்லாதவர்கள் என்றாலும் அதுவே அணியின் கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

ஏனெனில், அவர்கள் எவ்வாறு ஆடுவார்கள், எந்தப் பந்தை எப்படி எதிர்கொள்வார்கள் என்பது சென்னை அணி வீரர்களுக்கு தெரியாது என்பது சிக்கலே. பந்து வீச்சில் ஜொப்ராஆச்சர், வருண் ஏரோன், டொம் கரன் ஆகியோர் நம்பிக்கை அளிக்கும் வீரர்களாக ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

‘தல’ தோனியின் சென்னை சுப்பர் கிங்ஸ்

சென்னை சுப்பர் கிங்ஸைப் பொறுத்தவரை அணித் தலைவர் மஹேந்திரசிங் தோனியே அணியின் பெரும் பலமாக இருக்கிறார். அவரது அனுபவமும் வீரர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் அணுகுமுறையும் ஏனைய அணித்தலைவர்களுக்கு இல்லை என்றால் அது மிகையாகாது.

Photo: BCCI/ Chennai Super Kings

ஏற்கனவே முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய சென்னை அணி மைதானத்தின் சாதகத்தன்மை, கள நிலவரங்களை நன்கு அறிந்த அணியாகவே களமிறங்குகின்றது. ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியினர் இன்று தான் களமிறங்கப் போகிறார்கள் என்பதால் மைதானத்தின் தன்மைகளை உணர்ந்து தங்களை மாற்றிக் கொள்ள அவர்களுக்கு அவகாசம் தேவைப்படும்.

சென்னை அணியில் அவுஸ்திரேலியாவின் சேன் வாட்சன், இந்தியாவின் முரளி விஜய், அம்பாட்டிராயுடு, மஹேந்திர சிங் தோனி,தென் ஆபிரிக்காவின் பெப் டு பிலெசி துடுப்பாட்டத் தூண்களாகவுள்ளனர். இவர்களில் பெப் டு பிலெசி மும்பையுடனான போட்டியில் அரைச் சதமடித்திருந்தார்.

எனவே, இன்றையப் போட்டியானது அனுபவத்துக்கும், ஆர்வத்துக்கும் இடையிலான மோதலாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டியில் கிடைத்த வெற்றியை தக்கவைத்துக் கொண்டு முன்னேற வேண்டும் என்ற முனைப்பில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கடுமையாக முயற்சிக்கும். தோனியின் அனுபவத்தை ஸ்மித் தலைமையிலான ஆர்வத்துடன் கூடிய இளம் படை வெற்றி கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.