சர்வதேச கிரிக்கெட் சபையின் தனக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் டில்ஹார லொக்குஹெட்டிகே தெரிவித்துள்ளார்.
டில்ஹார லொக்குஹெட்டிகேவுக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்ட 3 குற்றச்சாட்டுக்கள் தீர்ப்பாயத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபையினால் நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக அவுஸ்திரெலியாவில் இருந்து கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள டில்ஹார லொக்குஹெட்டிகே, இந்த தீர்ப்புக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான பணிகளை இங்கிலாந்திலுள்ள சட்ட நிறுவனமொன்றுக்கு ஒப்படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் சபையின் தீர்ப்பாய குழுவின் உறுப்பினர் ஒருவர், தான் குற்றவாளியில்லை என்று தெரிவித்துள்ளதாகவும், இதனை அடிப்படையாக கொண்டு தனக்கு எதிரான தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்த முடியுமாக இருக்குமென்று டில்ஹார லொக்குஹெட்டிகே குறிப்பிட்டுள்ளார்.