November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பளக் கொடுப்பனவுகளை குறைப்பதற்கு தீர்மானம்

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பளக் கொடுப்பனவுகளை  குறைப்பதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

வீரர்களின் திறமை அடிப்படையில் கொடுப்பனவுகளை வழங்கும் வகையில் அது தொடர்பான ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவுக்கும், இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகளுக்கும் இடையே அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

தற்போதைய ஒப்பந்தத்தின்படி வருடத்திற்கு முதல்நிலை வீரர்களுக்கு 125,000 அமெரிக்க டொலர்களும், இரண்டாம் நிலை வீரர்களுக்கு 80,000 அமெரிக்க டொலர்களும் மற்றும் மூன்றாம் நிலை வீரர்களுக்கு 60,000 அமெரிக்க டொலர்களும் கொடுப்பனவாக வழங்கப்படுகின்றது.

அத்துடன் டெஸ்ட் போட்டியொன்றுக்காக வீரரொருவருக்கு 5000 அமெரிக்க டொலர் கூடுதலாக வழங்கப்படுகிறது. மேலும் இலங்கை அணி டெஸ்ட் போட்டியில் வென்றால் வீரர் ஒருவருக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொகை  7500 அமெரிக்க டொலர்களாக உயர்த்தப்படுகிறது.

2018 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், அதில் 11 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. அதேபோன்று அண்மைக் காலமாக இலங்கை அணி பெற்று வரும் தோல்விகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயங்களை கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளுக்குமான கொடுப்பனவுகளை வழங்கும் போதும் வீரர்களின் திறமை அடிப்படையில் வழங்க வேண்டும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ கிரிக்கெட் அதிகாரிகளுடன் அண்மையில் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

அத்தோடு போட்டி ஒன்றில் பங்கேற்பதற்காக வெளிநாடுகளுக்கு செல்வதாயின் அது வெற்றி பெறுவதற்காகவே என்பதை வீரர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் நாமல் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.