பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி தடுமாற்றமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கராச்சியில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென் ஆபிரிக்க அணி 220 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பதிலளித்தாடிய பாகிஸ்தான் அணி பவாத் ஆலம் பெற்ற சதத்துடன் 378 ஓட்டங்களைப் பெற்றது.
ஆட்டத்தின் மூன்றாம் நாளன்று 8 விக்கெட் இழப்புக்கு 308 ஓட்டங்களுடன் முதல் இன்னிங்ஸை தொடர்ந்த பாகிஸ்தான் அணி மேலும் 70 ஓட்டங்களைப் பெற்று கடைசி 2 விக்கெட்டுகளையும் இழந்தது. பவாத் ஆலம் 109 ஓட்டங்களைப் பெற்றார்.
பின்வரிசை வீரர்களான யசீர் ஸா 38 ஓட்டங்களையும், நவ்மன் அலி 24 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் கெகிஸோ ரபாடா, கேஸவ் மகாராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், அன்ரிஜ் நொட்ரிச், லுங்கி நிகிடி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்போது டெஸ்ட் அரங்கில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சிறப்பை கெகிஸோ ரபாடா பெற்றார்.
158 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த தென் ஆபிரிக்கா 48 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. டீன் எல்கர் 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
எனினும், எய்டன் மக்ரம் 74 ஓட்டங்களையும், வென்டர் டசன் 64 ஓட்டங்களையும் பெற்று தென் ஆபிரிக்காவை இன்னிங்ஸ் தோல்வி நிலையிலிருந்து மீட்டெடுத்தனர்.
என்றாலும் நான்காம் இலக்க வீரராகக் களமிறங்கிய பெப் டு பிலெசி 10 ஓட்டங்களுடன் வெளியேற தென் ஆபிரிக்காவின் நிலை நெருக் கடிக்குள்ளானது.
கேசவ் மகாராஜ் 2 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் குவின்டன் டி கொக் ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதுள்ளனர். தென் ஆபிரிக்க அணி 29 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.
நான்காம் நாளில் தென் ஆபிரிக்க அணி வீரர்கள் பாரிய ஓட்ட எண்ணிக்கையை குவித்தால் மாத்திரமே தோல்வியடைவதை தடுக்க முடியும்.