November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விறுவிறுப்பு போட்டியில் கோலி அணி வெற்றி! சொதப்பியது வார்னர் அணி!

Photo: BCCI/Royal Challengers Bangalore

இன்றைய ஆட்டத்தில் 20 டேவிட் வார்னரின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி விராத் கோலியின் பெங்களுர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணி 13வது ஐ.பி.எல் தொடரில் தனது வெற்றிப் பயணத்தை ஆரம்பித்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணித்தலைவர் டேவிட் வார்னர் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார். அவரது இந்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தும் வண்ணம் பெங்களுர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்டம் அமைந்தது.

டெவ்டட் படிக்கால் மற்றும் ஏரோன் பிஞ்ச் ஜோடி முதல் விக்கெட்டுக்காக 11 ஓவர்களில் 90 ஓட்டங்களைப் பகிர்ந்தது.சிறப்பாக ஆடிய டெவ்டட் படிக்கால் 42 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பெற்று 11வது ஓவரின் கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே ஏரோன் பிஞ்சும் ஆட்டமிழக்க பெங்களுர் அணிக்கு சற்று நெருக்கடி ஏற்பட்டது. ஏரோன் பிஞ்ச் 27 பந்துகளில் 29 ஓட்டங்களைப் பெற்றார்.

விராத் கோலி

சிக்ஸர் மழை பொழிவார் என எதிர்பார்க்கப்பட்ட அணித்தலைவர் விராத் கோலியால் 13 பந்துகளில் வெறும் 14 ஓட்டங்களையே பெற முடிந்தது; அவரால் ஒரு பவுண்டரியைக்கூட அடிக்க முடியவில்லை.

என்றாலும், 360 பாகை நாயகனான ஏபி டிவிலியர்ஸ் நாலாபக்கமும் பந்தை தெறிக்கவிட்டு 51 ஓட்டங்களை விளாசி ரன்அவுட் ஆனார். 30 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளையும் விளாசினார். பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் விஜய் சங்கர், அபிஸேக் சர்மா, டி.நடராஜன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

நட்சத்திர பந்து வீச்சாளர்களான புவனேஸ்வர் குமார் 4 ஓவர்களில் 25 ஓட்டங்களையும், ரஸிட் கான் 4 ஓவர்களில் 31 ஓட்டங்களையும் கொடுத்த போதிலும் அவர்களால் ஒரு விக்கெட்டையேனும் வீழ்த்த முடியவில்லை.

வெற்றி இலக்கான 164 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஆரம்பமே சோகமயமாக அமைந்தது. அணித்தலைவர் டேவிட் வார்னர் 6 ஓட்டங்களுடன் ரன்அவுட் ஆனார். அப்போது சன்ரைசர்ஸ் அணி 1.4 ஓவர்களில் 18 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

சவால் நிலையிலிருந்து பரிதாப நிலைக்கு

என்றாலும் அடுத்து இணைந்த மனிஸ் பாண்ட்டே – ஜொனி பெயார்ஸ்டோவ் ஜோடி 71 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தது. மனிஸ் பாண்ட்டே 33 பந்துகளில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 34 ஓட்டங்களைப் பெற்று ஆட்மிழக்க ஜொனி பெயார்ஸ்டோ அரைச் சதமடித்தார். 43 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்றார்.

ஜொனி பெயார்ஸ்டோவ் களத்தில் நிற்கும் வரை சன்ரைசர்ஸ் அணி வசமிருந்த ஆட்டம் அவர் ஆட்டமிழந்த பின்பு பெங்களுர் அணியின் பக்கம் திரும்பியது. ஜொனி பெயார்ஸ்டோவ் ஆட்டமிழந்த போது சன்ரைசர்ஸ் அணி 15.2 ஓவர்களில் 121 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள் எனும் சவாலான நிலையில் இருந்தது.

ஆனாலும், நவ்தீப் சானியின் அபார பந்துவீச்சில் ஆட்டத்தின் போக்கே மாறியது. அடுத்த 6 விக்கெட்டுகளும் வெறும் 22 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இன்னிங்ஸ் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டது.

விஜய் சங்கர், புவனேஸ்வர் குமார், மிச்செல் மார்ஸ் ஆகியோர் ஓட்டமின்றி ஆட்டமிழந்து பெரும் ஏமாற்றமளித்தனர்.சன்ரைசர்ஸ் அணியால் 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 153 ஓட்டங்களையே பெற முடிந்தது.பெங்களுர் அணி 10 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.