July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு வெட்கமில்லாமல் போய்விட்டது’

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீரர்களுக்கு தோல்வியினால் ஏற்பட வேண்டிய வெட்க உணர்வு இல்லாமல் போய்விட்டது. இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளும் வெட்கமில்லாதவர்களாகவே செயற்படுகின்றார்கள் என உலக சம்பியன் அணித்தலைவரான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுடனான நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாமெல்லாம் கிரிக்கெட் விளையாடும் போது ஒரு போட்டியில் தோல்வியடைந்தாலும் மிகுந்த வேதனையும், வெட்கமும் படுவோம். எப்படியாவது அடுத்த போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்று திடசங்கற்பம் எடுப்போம்.

ஆனால், தற்போது அப்படியல்ல. எத்தனை தோல்விகளைத் தழுவினாலும் இலங்கை வீரர்கள் அதற்காக வெட்கப்படுவதில்லை. ஏனோ தானோவென்று விளையாடும் அவர்களால் இலங்கை கிரிக்கெட் அழிந்து போய்க்கொண்டிருக்கிறது.

இங்குள்ள பாடசாலைக் கட்டமைப்பு, முதல்தர போட்டிகள் நடத்தப்படும் விதம் என சகலதும் சீர்குலைந்து விட்டது. அதிகாரிகளும் அசமந்தப் போக்குடனேயே செயற்படுகிறார்கள்.

அன்று வீரர்களின் திறமையால் வெற்றிபெற்ற நாம் இன்று தோல்வியில் தவிக்கிறோம். முதல்தர மற்றும் பாடசாலைகள் கிரிக்கெட்டின் தரம் குறைந்துவிட்டது. இதன் காரணமாகவே எம்மால் வெற்றிபெற முடியாமல் உள்ளது. இந்தக் கட்டமைப்பை அடியோடு திருத்தினால் மாத்திரமே இலங்கை கிரிக்கெட்டை பழைய நிலைமைக்கு கொண்டுவர முடியும் எனவும் அர்ஜுன ரணதுங்க கூறினார்.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய நிலைமை மிகுந்த வருத்தமளிக்கிறது. படிப்படியாக எமது கிரிக்கெட் தாழ்த்தப்பட்டு தற்போது அது கைவிடப்படும் அளவுக்கு சென்றுள்ளது. இதனை சீர்படுத்த வேண்டுமாகவிருந்தால் அடியோடு இலங்கை கிரிக்கெட்டை மாற்றி புதுப்பிக்க வேண்டும் என முன்னாள் அணித்தலைவரான சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நாம் உள்ளிட்ட வீரர்கள் சிரமப்பட்டு கட்டியெழுப்பிய கிரிக்கெட்டை இவர்கள் நாசப்படுத்திவிட்டார்கள். அர்ஜுன ரணதுங்கவின் கருத்துகளை ஆமோதிக்கிறேன் என்று சனத் ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.