November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது பங்களாதேஷ்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவதும், இறுதியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 120 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்று, தொடரை 3-0 எனும் ஆட்டக் கணக்கில் கைப்பற்றியுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி பங்களாதேஷு க்கு விஜயம் செய்து விளையாடுவதுடன், முதல் அம்சமாக சர்வதேச ஒருநாள் தொடர் நடைபெற்றது. முதலிரண்டு போட்டிகளிலும் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றிருந்ததுடன், ஆறுதல் வெற்றியை நோக்கி மூன்றாவது போட்டியில் மேற்கிற்தியத் தீவுகள் அணி களமிறங்கியது.

எவ்வாறாயினும், பெயர் குறிப்பிடும்படியான நட்சத்திர வீரர்கள் எவரும் மேற்கிந்தியத் தீவுகள் குழாத்தில் இடம்பெற்றிருக்கவில்லை என்பதுடன், இரண்டாம் தர அணி வீரர்களுடனேயே இத்தொடரை மேற்கிந்தியத் தீவுகள் அணி எதிர்கொண்டது. அதன் பிரதிபலனாக மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டியிலும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு தோல்வியே கிட்டியது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 38 ஓட்டங்களுக்கு முதலிரண்டு விக்கெட்டுகளையும் இழந்தது. லிட்டன் டாஸ் ஓட்டமின்றியும், நஜ்முல் ஹு ஸைன் 20 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

ஆனாலும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் தமிம் இக்பால், முஸ்பிகுர் ரஹீம், மஹ்மதுல்லா ஆகிய மூவருமே தலா 64 ஓட்டங்களைப் பெற்றனர். இவர்களின் துடுப்பாட்டம் பங்களாதேஷ் அணியை உச்ச நிலைக்கு கொண்டு சென்றது.

ஷகில் அல் ஹசன் 51 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க பங்களாதேஷ் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 297 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில் அல்சாரி ஜோசப், ரேய்மன் ரெய்பர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

298 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி ஓட்டங்களைப் பெற முடியாமல் தத்தளித்தது. கடந்த இரண்டு போட்டிகளிலும் போன்றே அணி வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்கள்.

பின்வரிசையில் களமிறங்கிய ரொவ்மன் பவெல் பெற்ற 47 ஓட்டங்களே மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக ஒரு வீரர் பெற்ற அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையாகும். நிகுர்மா பொன்னர் 31 ஓட்டங்களைப் பெற்று ஆறுதல் அளித்தார்.

44.2 ஓவர்களில் 177 ஓட்டங்களுடன் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சகல விக்கெட்டுகளும் வீழ்த்தப்பட வெற்றியை பங்களாதேஷ் அணி மிக இலகுவாக அடைந்தது.

மொஹ்மட் சைபுடீன் 3 விக்கெட்டுகளையும், முஸ்டபிசுர் ரஹ்மான், மெஹிடி ஹஸன் மிராஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி வெற்றிக்கு வழிவகுத்தனர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக முஸ்பிகுர் ரஹீமும், தொடரின் சிறந்த வீரராக ஷகில் அல் ஹசனும் தெரிவாகினர். ஷகில் அல் ஹசன் ஓராண்டு போட்டித்தடை முடிந்து இந்தத் தொடரில் பங்குப்பற்றியதும் இங்கு நினைவுகூரத்தக்கது.