November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய அணிக்காக ஒத்திவைக்கப்பட்ட டெஸ்ட் உலக சாம்பியன்ஸிப் இறுதிப் போட்டி

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் உலக சாம்பியன்ஸிப் இறுதிப் போட்டி எதிர்வரும் ஜூன் 14 ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 18 ஆம் திகதிக்கு ஒத்தவைக்கப்பட்டுள்ளது.

2019 முதல் 2021 வரை டெஸ்ட் போட்டிகளில் முன்னணி அணிகள் பெற்ற வெற்றிகளுக்கு அமைவாக புள்ளிகள் அடிப்படையில் முதலிரண்டு இடங்களை பெறும் அணிகளுக்கிடையில் இறுதிப் போட்டி கிரிக்கெட்டின் தாயகமாகப் போற்றப்படும் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

புள்ளிகள் பிரகாரம் தற்போதைய நிலையில் இந்தியாவும், நியூஸிலாந்து அணியும் முதலிரண்டு இடங்களை வகிக்கின்றன. எதிர்வரும் போட்டிகளில் இந்தியா – இங்கிலாந்து அணிகளும், அவுஸ்திரேலியா – தென் ஆபிரிக்கா ஆகிய அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இந்த தொடர்களின் பின்னர் முதலிரண்டு இடங்களிலுள்ள அணிகள் டெஸ்ட் உலக சாம்பியன்ஸிப் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன. இதற்கு இந்தியா பெரும்பாலும் தகுதிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாகவே டெஸ்ட் உலக சாம்பியன்ஸிப்பின் இறுதிப் போட்டி ஜூன் 18 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் ஆரம்பமாகும் ஐ.பி.எல் போட்டிகள் ஜூன் முதல் வாரத்தில் முடிவடையவுள்ளன.

அதன்பிறகு இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்துக்கு சென்று தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிவரும் என்பதால் இறுதிப் போட்டியை ஒத்திவைக்கும் ஏற்பாடு முன்னெடுக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.